இரவுக் காட்சிக்கு தனிமையில் சென்று வந்த 5 மாணவிகள்! ஹாஸ்டலில் நேர்ந்த பரிதாபம்!

திருவனந்தபுரம்: படம் பார்த்த குற்றத்திற்காக, 5 மாணவிகளை வெளியில் துரத்திய கேரள அரசின் இரவு தங்கும் விடுதிக்கு, கண்டனம் குவிந்து வருகிறது.


திருவனந்தபுரத்தில் கேரள அரசுக்குச் சொந்தமான என்டே கூடு என்ற பெயரில் இரவு நேரத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு தரக்கூடிய விடுதி செயல்பட்டு வருகிறது. திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே இது உள்ளது. இங்கு ஐஐஎஸ்ஈஆர் கல்வி நிறுவனத்தில் படிக்கும் 5 மாணவிகள், சமீபத்தில் இரவு நேரம் தங்க அனுமதி கோரியுள்ளனர்.

அவர்கள் அருகில் உள்ள லெனின் சினிமாஸ் தியேட்டரில் நைட் ஷோ படம் பார்த்துவிட்டு, தங்களது ஹாஸ்டலுக்குச் செல்ல நேரமாகிவிடவே, காலை வரை தங்கியிருக்க, என்டே கூடுவுக்கு சென்றுள்ளனர். ஆனால், அங்கிருந்த பெண் நிர்வாகி, அவர்களை இரவு நேரம் என்று கூட பாராமல் வெளியே தள்ளி கதவை சாத்தியுள்ளார். 

சினிமா பார்த்துவிட்டு வருவோருக்கு என்டே கூடுவில் இடம் கொடுத்தால், எங்களின் மரியாதை கெட்டுவிடும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். இதனை பாதிக்கப்பட்ட பெண்களின் சார்பாக, அவர்களில் ஒருவர் சமூக ஊடகங்களில் வீடியோ எடுத்து பதிவேற்றம் செய்துள்ளார். இந்த சம்பவம் தற்போது கேரளா முழுவதும் வைரலாகி வருகிறது. பெண்களின் பாதுகாப்பிற்காக தொடங்கப்பட்ட என்டே கூடுவில் இரவு நேரம் தங்க பெண்களுக்கே அனுமதி தராத, நிர்வாகத்தினரை கண்டித்து பலரும் தகவல் பகிர்கின்றனர். பெண் அடிமைத்தனமா இது என்றும் சிலர் கேட்கிறார்கள்.