15 மாதம்..! ஒருவர் பின் மற்றொருவர்..! ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் ஒரே இடத்தில் விபத்தில் பலி! காவு வாங்கும் புல்லம் பள்ளம் ஜங்க்சன்!

திருச்சூர்: ஒரே இடத்தில், 4 சகோதரர்கள் ஒருவர் பின் ஒருவராக, பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ள்து.


கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் மரத்தக்காரா என்ற பகுதியை ஒட்டி,  தேசிய நெடுஞ்சாலையில் புல்லம்பள்ளம் ஜங்ஷன் என ஒரு இடம் உள்ளது. இங்கு சாலை விபத்துகள் அடிக்கடி நடப்பது வழக்கமாகும். இதே பகுதியை சேர்ந்தவர் குட்டன். இவருக்கு, 4 மகன்கள். இதன்படி, ஒன்றரை ஆண்டுக்கு முன், திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, புல்லம்பள்ளம் ஜங்ஷனில் லாரி மோதி குட்டனின் மூத்த மகன் சுதாகரன் உயிரிழந்தார். இது அவரது குடும்பத்தைச் சோகத்தில் ஆழ்த்தியது.  

இந்த சம்பவம் நிகழ்ந்து ஓராண்டு சென்ற நிலையில், கடந்த 2019 ஜூலை மாதம் குட்டனின் மற்றொரு மகன் சீனிவாசன், இதே புல்லம்பள்ளம் பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் மரணமடைந்தார். அடுத்த சில நாட்களில், குட்டனின் இன்னொரு மகன் ஆனந்தன், புல்லம்பள்ளம் ஜங்ஷனை ஒட்டிய பகுதியில் பைக் மோதி, உயிரிழந்தார். இப்படி வரிசையாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.  

சரி இத்துடன் எல்லாம் முடிந்துவிட்டது என்றெண்ணிய குட்டன் குடும்பத்திற்கு, கடைசியாக ஒரு இடி விழுந்தது. ஆம், அவரது கடைசி மகன் உன்னி கிருஷ்ணன், கடந்த சனிக்கிழமை இரவு புல்லம்பள்ளம் ஜங்ஷனின் நடந்துசென்றபோது, பைக் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதன்படி, கடந்த ஒன்றரை ஆண்டுக்குள் குட்டனின் 4 மகன்களும் புல்லம்பள்ளம் ஜங்ஷனிலேயே தங்களது உயிரை பறிகொடுத்திருக்கிறார்கள்.

இப்படி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் அடுத்தடுத்து சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட 4 பேரும், நடந்து சென்றபோது வாகனம் மோதி உயிரிழந்துள்ளனர். எனவே, பாதசாரிகளுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யும்படி குட்டன் குடும்பத்தினர் உருக்கமான வேண்டுகோளை முன்வைக்கின்றனர்.