திருவனந்தபுரம்: குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கேரள ஜோடி வெளியிட்ட திருமண ஃபோட்டோஷூட் வைரலாகி வருகிறது.
கல்யாண போடோ சூட்டை போராட்ட களமாக்கிய இளம் தம்பதி..! வைரலாகும் புகைப்படத்தின் பின்னணி!
நாடு முழுவதும் மத்திய அரசு அமல்படுத்த உள்ள புதிய குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்நிலையில், கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அருண் கோபி என்பவருக்கும், கொல்லம் பகுதியை சேர்ந்த ஆஷா சேகர் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் தங்களது திருமணத்தை முன்னிட்டு ஃபோட்டோஷூட் நடத்தினர். அதனை வழக்கமான ஃபோட்டோஷூட்களில் இருந்து வித்தியாசப்படுத்தும் வகையில், குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்க்கும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை இருவரும் கைகளில் பிடித்தபடி, போஸ் கொடுத்துள்ளனர். இந்த புகைப்படங்கள், வித்தியாசமாகவும், அதேசமயம், சமூக அக்கறையுடன் கூடியதாகவும் உள்ளதால், பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இதுபற்றி மணமகன் அருண் பேசுகையில், ''அரசியல் எல்லோருக்கும் தேவை, எனக்கு தெரிந்த உண்மையை வெளிப்படுத்த எனது திருமண ஃபோட்டோஷூட்டை ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது,'' என்றார். இவர் கேரள அரசின் மாநில குழந்தைகள் நலவாரிய கவுன்சிலில், திருவனந்தபுர மாவட்ட பொருளாளராக உள்ளது குறிப்பிடத்தக்கது.