கேரள பெண் எம்பிக்கு கார் வாங்க நிதி திரட்டும் காங்கிரஸ் தொண்டர்கள்.
பெண் எம்.பி.க்காக நிதி திரட்டும் காங்கிரஸ் தொண்டர்கள்... எதுக்காகன்னு தெரியுமா?

கடந்த பாராளுமன்ற தேர்தலில் கேரளத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே பெண் எம்.பி ரம்யா ஹரிதாஸ். கோழிக்கோட்டைச் சேர்ந்த மகிளா காங்கிரஸ் பிரமுகர் ராதா,ஹரிதாஸ் தம்பதியினரின் மகளான ரம்யா,கேரள சரித்திரத்திலேயே பார்லிமெண்ட்டுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாவது தலித் என்கிற பெருமைக்குச் சொந்தக்காரர்.
எளிமையான பின்னணியில் இருந்து வந்த ஆலத்தூர் தொகுதி எம்பி ரம்யாவுக்கு கார் பரிசளிக்க பலர் முன்வந்தபோதும் அதில் வெளிப்படைத் தன்மை இருக்காது என்பதால் அவற்றை ஏற்க மறுத்துவிட்டாராம்.இப்போது ஆலத்தூர் இளைஞர் காங்கிரஸ் யூனிட் பிரசிடெண்ட் பாளையம் பிரதீப் தலைமையில் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் களமிறங்கி இருக்கிறார்கள். நிதி கேட்டு பொதுமக்களை அணுக மாட்டோம்.காங்கிரஸ் தொண்டர்களிடம் மட்டுமே நிதி பெறப்படும்.
பொதுமக்கள் யாரேனும் அவர்களாக முன்வந்து கொடுத்தால் மட்டுமே எற்றுக்கொள்ளப்படும் என்று பாளையம் பிரதீப் தனது முகநூல் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.தொண்டர்கள் வழங்கும் நிதியிலிருந்து வாங்கப்படும் காரின் சாவியை வரும் ஆகஸ்ட் 9 ம் தேதி நடைபெறும் விழாவில் கேரள எதிர்க்கட்சி தலைவரான ரமேஷ் சென்னித்தல ரம்யாவிடம் வழங்குவார் என்று பாளையம் பிரதீப் அறிவித்திருக்கிறார்.'என் வெற்றிக்காக உழைத்த இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் எனக்கு கார் வாங்கித் தருவது மகிழ்ச்சி அளிக்கிறது ' என்று ரம்யா தெரிவித்து இருக்கிறார்.