புற்றுநோயாளிகளுக்கு இலவச சவாரி! நெகிழ வைக்கும் ஆட்டோ டிரைவர்! அசர வைக்கும் காரணம்!

புற்றுநோயாளிகளுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் இலவசமாக ஆட்டோ ஓட்டும் டிரைவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.


திருவனந்தபுரத்தில் உள்ள மணவீயம் வீதி பக்கம் நீங்கள் சென்றால், வினோத் குமார் கேவி என்ற ஆட்டோ டிரைவரை சந்திக்கலாம். அவரது ஆட்டோவை அடையாளம் கண்டுபிடிக்க நீங்கள் அதிக சிரமப்பட தேவையில்லை, அவரது ஆட்டோவில், சிவப்பு எழுத்துகளில், கேன்சர் கேர் ஃபார் லைஃப் என எழுதப்பட்டிருக்கும்.

இவர்தான் இப்படி புற்றுநோயாளிகளுக்கு இலவச சவாரி வழங்கி, உதவி வருகிறார். தினசரி காலை 9 மணிமுதல் மதியம் 1 மணிவரை, ரீஜினல் கேன்சர் சென்டருக்கு, கணக்கு வழக்கு பார்க்காமல், இலவசமாகவே புற்றுநோயாளிகளை அழைத்து வருவதும், வழியனுப்பி வைப்பதையும் இவர் செய்து வருகிறார். 

2012ம் ஆண்டு முதல் இப்படி இலவச சேவை செய்து வருகிறாராம். காரணம் கேட்டால், அடிக்கடி மாரடைப்பால் பாதிக்கப்பட நேரிட்டதால், வாழும் காலம் வரை மக்களுக்கு உதவி செய்வது என்ற முடிவை மேற்கொண்டதாக, இவர் சொல்கிறார். இதுதவிர, ரத்த நன்கொடை பெற்றுத் தரும் சேவையையும் சுற்றுப்புற பகுதியில் செய்துவருவதாக, வினோத் குறிப்பிடுகிறார். 

வருமானத்திற்கு என்ன செய்கிறீர்கள் எனக் கேட்டால், இருப்பது போதும் என புன்னகையுடன் மறுக்கிறார்.  இவரது சேவையை பாராட்டி, பல வெளிநாடு வாழ் மலையாளிகள், பணத்தை அள்ளித் தருவதாகச் சொன்னாலும், இவருக்கு அதில் விருப்பம் இல்லை எனக் கூறுகிறார். உள்ளூர் தொண்டு நிறுவனங்கள் முதல், இந்திய மெடிக்கல் அசோஷியேசன், கேரளா போலீஸ் மற்றும் பல சமூக ஆர்வலர்களுடன் வினோத்திற்கு நேரடி தொடர்பு உள்ளது. அவரது சேவை மனப்பான்மை இந்திய அளவில் பலரால் பாராட்டும்படியாக உள்ளது.

வினோத் மேற்கொண்ட சீரிய முயற்சியால், திருவனந்தபுரத்தில் உள்ள ரீஜினல் கேன்சர் சென்டரின் உள்கட்டமைப்பு வசதிகள் தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு, மத்திய, மாநில அரசுகளும் உதவிக்கரம் நீட்டியுள்ளன. இத்தகைய உதவியை பெற்றுத் தர, வினோத் தனிப்பட்ட நபராக பாடுபட்டதை, ரீஜினல் கேன்சர் சென்டர் நிர்வாகிகள் கூட பாராட்டுகின்றனர். இந்த உலகம் புற்றுநோயில் இருந்து விடுபட வேண்டும் என்பதே, வினோத்தின் கனவாக உள்ளது. அது நிறைவேற நாமும் வாழ்த்துவோம். 

இந்த வியத்தகு மனிதரை பாராட்ட நினைத்தாலோ அல்லது அவர் செய்யும் தொண்டுப்பணிகளில் பங்கு பெற நினைத்தாலோ அல்லது உதவி கேட்க நினைத்தாலோ 9744747544 என்ற  அலைபேசி எண்ணை தொடர்புகொள்ளுங்கள்....