60 ஆண்டுகள் ஓயாத உழைப்பு! ஒரு நாளும் லீவ் எடுக்காத பஞ்சுவாலிட்டி! 91 வயதிலும் கல் சுமக்கும் காத்ரீனா!

திருவனந்தபுரம்: 91 வயதிலும் நாள் தவறாமல் தினசரி கட்டிட வேலைக்குச் செல்லும் கேரளப் பாட்டி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.


திரிசூர் பகுதியை சேர்ந்தவர் கத்ரீனா கட்டுக்காரன். 91 வயதாகும் இவர், கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக, சளைக்காமல் கட்டிட வேலைக்குச் சென்று வருகிறார். இந்த வயதிலும் அவர் தினசரி நாள் தவறாமல் வேலைக்குச் சென்று விடுகிறாராம். அவரவர் 60 வயதுக்கு மேல் ஓய்வுபெறும் இந்த காலத்தில், இப்படி ஒரு பெண் நாள் தவறாமல் வேலைக்குச் செல்வது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதுபற்றி அவரிடம் கேட்டபோது, ''சாகும் வரை வேலை செய்யவே விரும்புகிறேன்,'' என்று தன்னம்பிக்கையுடன் கூறுகிறார். திரிசூரை சுற்றியுள்ள பல கட்டிடங்கள், மேம்பாலங்களின் கட்டுமானப் பணிகளில் தான் பங்கேற்றுள்ளதாக, அவர் பெருமையுடன் தெரிவிக்கிறார். தினசரி காலை 5 மணிக்கு அலாரம் வைத்து எழும் இந்த பாட்டி, 3 அல்லது 4 கப் காபி குடிக்கிறார்.

அதன்பின், வேலைக்கு புறப்பட்டுச் சென்றுவிடுகிறார். அங்கு சிமெண்ட் கலப்பது, கலவை பூசுவது, உடைப்பது உள்ளிட்ட வேலைகளைச் செய்கிறார். வயதானாலும் சளைக்காமல் 5 மாடி கட்டிடங்களை அநாயசமாக ஏறிச் செல்லும் இவர், சிமெண்ட் மூட்டைகளையும் சுமந்து செல்கிறார். இதுதவிர, இரு கட்டிடங்களுக்கு இடையே சாரம் கட்டும் பணிகளிலும் கத்ரீனா பாட்டி தைரியமாகச் செயல்படுகிறார். கத்ரீனா வேலை செய்யும் இடங்களில் அவரது மகள் பிலோமீனாவும் (56)  பணிபுரிகிறார். 

இத்தனை ஆண்டுகள் உழைத்து சம்பாதித்த பணத்தில், தனது குடும்பத்தினருக்காக , 4 வீடுகளை கத்ரீனா கட்டி தந்துள்ளாராம். அவருக்கு 4 குழந்தைகள், 9 பேரக் குழந்தைகள், 14 கொள்ளுப் பேர குழந்தைகள் உள்ளனர். ஆனாலும், குடும்பத்தில் வறுமை இன்னும் ஓயவில்லை. அனைவரும் கூலி வேலை செய்துதான் அன்றாட வாழ்க்கையை நடத்துகிறார்கள்.

உண்மையில், கத்ரீனா ஓடி ஓடி உழைப்பதற்கான காரணம் இதுதான். இருந்தாலும், இளம் வயதிலேயே சோம்பி திரியும் பலருக்கு, கத்ரீனா பாட்டி முன்னுதாரணமாக உள்ளார் என்றால் அது மிகையல்ல.