தாய்லாந்து சிறையில் கரூர் இளைஞர் தற்கொலை..! வைகோ மனிதாபிமான உதவி

தாய்லாந்தில் சிறையில் தற்கொலைசெய்துகொண்ட கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் பிரகாசின் சடலம் விரைவில் சொந்த ஊருக்கு வந்துசேர்ந்துவிடும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெயசங்கர் தெரிவித்துள்ளார்.


கருப்பூர் மாயனூர் சங்கரன்மலைப்பட்டியைச் சேர்ந்த இளைஞர் பொறியாளர் பிரகாஷ் நடராஜன். 2017 ஆம் ஆண்டு, தாய்லாந்துக்கு வேலைக்குச் சென்றவர், 2018-ல் ஒரு கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கே அவர் தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல் வந்தது.  

இது குறித்து வைகோவின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டது. அக்கட்சியின் கரூர் மாவட்டச்செயலாளர் கபினி சிதம்பரம், ம.தி.மு.க. மாணவர் அணிச் செயலாளர் பால சசிகுமார் ஆகியோரின் தகவலைப் பெற்றுக்கொண்ட வைகோ, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு மின்அஞ்சல் மூலம் தெரிவித்தார். அதன்பேரில், அமைச்சகத்தில் இருந்து தாய்லாந்து இந்தியத் தூதரகத்தைத் தொடர்புகொண்டனர். அதற்கு விளக்கம் அளித்து, பாங்காங்கில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரி அனுப்பி உள்ள தகவல்:  

இறந்தவருடைய குடும்பத்தினர், கரூர் மாவட்ட ஆட்சியர், காவல்துறைக் கண்காணிப்பாளருடன் நாங்கள் தொடர்பு கொண்டுள்ளோம். உடலை இந்தியாவுக்கு அனுப்புவதற்கான ஆவணங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. ஏசியா ஒன் என்ற சரக்குப் போக்குவரத்துத் துறையினர், அதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

அதற்கான செலவுகளைக் குடும்பத்தினர் ஏற்க இயலாத நிலையைக் கருதி, இந்திய சமூக நல நிதியில் இருந்து ஈடுகட்ட, தூதர் ஒப்புதல் தந்துள்ளார். அடுத்த 3 அல்லது 4 நாள்களில் உடல் சென்னைக்கு வந்து சேரும். அங்கிருந்து, கரூருக்குக் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளோம்.”என்ற தகவலை, வைகோவிடம் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார். 

ம.தி.மு.க. தலைமையகமான தாயகத்தின் செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.