கொரோனா தொற்று காலத்திலும் ஓய்வு இல்லாமல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்துவருகிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
கரூரில் முதல்வருக்கு கலக்கலான வரவேற்பு..! ஏராளமான நலத்திட்ட உதவிகள்..!
அந்த வகையில், சேலத்தில் இருந்து கரூர் வருகை தந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அடுத்த புதுப்பாளையத்தில் மாவட்ட அதிமுக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, வெங்கமேடு பேருந்து நிலையம் லைட் ரோஸ் கார்டன் தாந்தோன்றிமலை நீதிமன்ற வளாகம் மாவட்ட ஆட்சியர் வளாகம் என ஏழு இடங்களில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மலர்விழி தலைமையில் நடைபெற்ற அரசு விழாவில், பங்கேற்ற முதலமைச்சர் பழனிசாமி, கரூரில் புதிதாக ரூ 7 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கரூர் நகராட்சி அலுவலக கட்டடம், உழவர் சந்தை அருகே ரூ 3.50 கோடி திட்ட மதிப்பில் நகராட்சிக்கு சொந்தமான பல்நோக்கு வளாகம், கரூர் திருமாநிலையூர் அமராவதி ஆற்றின் இடையே உள்ள பழைய பாலத்தில் கே.வி.பி வங்கியின் பங்களிப்புடன் ரூ. 2 கோடி மதிப்பில் நடைபாதை பூங்கா மற்றும் அரவக்குறிச்சி ஒன்றியம் செல்லிவலசில் நங்காஞ்சி ஆற்றின் இடையே ரூ. 3.96 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம் உட்பட பொது சுகாதாரம், ஊரக வளர்ச்சி ஊராட்சித் துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறைல் முடிவுற்ற 28 திட்டங்களை மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.
கரூர் மாவட்டம் க.பரமத்தி மற்றும் அரவக்குறிச்சி ஒன்றிய பகுதியில் 756 குடியிருப்புகளுக்கு ரூ 47.65 கோடி திட்ட மதிப்பு காவிரி கூட்டு குடிநீர் திட்டம், கரூர் இரட்டை வாய்க்கால் பகுதியில் ரூ.2.50 கோடியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் கரூர் தான்தோன்றி மலை மற்றும் கடவூர் என இரண்டு இடங்களில் ரூ. 4 கோடியே 88 லட்சம் மதிப்பு கல்லூரி மாணவர்கள் விடுதி, மற்றும் பொது சுகாதாரத்துறை, வேளாண்மைத்துறை தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம், நகராட்சி நிர்வாகம், குடிநீர் வடிகால் வாரியம் உள்ளிட்ட துறைகளின் சார்பில் ரூ.627 கோடி மதிப்பில் 2,089 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
இதைத்தொடர்ந்து, வருவாய்துறை, பேரிடர் மேலாண்மை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மகளிர் திட்டம் கூட்டுறவு துறை வேளாண்மைத் துறை கால்நடை பராமரிப்புத்துறை குடிசை மாற்று வாரியம் உள்ளிட்ட துறைகளில் துறைகளில் பயனாளிகளுக்கு ரூ. 35 கோடியில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன் பின்பு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிலாளர் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் மகளிர் சுய உதவிக்குழுவினர் ஆகியோருடன் முதல்வர் கலந்துரையாடினார்.