தோசையில் வெரைட்டி! சட்னியில் தனி ருசி! ஒரே ஒரு தள்ளுவண்டி! மாதம் ரூ.60 ஆயிரம் அள்ளும் கரூர் மோகன்!

கரூரில் தள்ளுவண்டிக் கடையில் விதவிதமான வெரைட்டி தோசைகளை சுட்டு கலக்கும் மோகன் என்ற முன்னாள் ஆட்டோ ஓட்டுனர் வாடிக்கையாளர்களிடம் சிறப்பான பெயரை பெற்றுள்ளார்.


2000ஆவது ஆண்டு வரை ஆட்டோ ஓட்டும் தொழில் தான். வாடகை வீட்டில் வறுமைக் இடையேதான் ஜீவனம். வருமானம் இல்லாத தனக்கு திருமணம் ஆகுமா என்ற சந்தேகமே மோகனுக்கு இருந்தது

இந்நிலையில் சக ஆட்டோ ஓட்டுநரான செல்வம் என்பவர் ஆட்டோ ஓட்டும் தொழிலை விட்டுவிட்டு ஹோட்டல் தொடங்கினார் ஆனால் அந்தத் தொழிலை தொடர்ந்து நடத்த முடியாமல் மீண்டும் ஆட்டோ ஓட்டும் தொழிலுக்கே வந்தார் அதுகுறித்து மோகன் செல்வத்திடம் கேட்டபோது இந்தத் தொழிலை நடத்தி பார்த்தால்தான் அதில் உள்ள சிரமம் தெரியும் என செல்வம் சவால் விட அதனை மோகன் ஏற்றுக்கொண்டார்.

இதையடுத்து அவர் கரூரில் ஒரு தள்ளுவண்டி கடையைத் தொடங்கினார்  சமையல் தெரியாத தன்னால் சமாளிக்க முடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டாலும் எப்படியும் சவாலில் வென்றுவிட வேண்டும் என்ற வேகம் அவரை உந்தியது மோகனின் தாய்  நன்றாக சமைப்பார் என்பதால்  அவரது உதவியுடன்  தள்ளுவண்டி கடையைத் தொடங்கினார்.

அவரது கடையின் சுவைக்கு வாடிக்கையாளர்கள் பெருகத் தொடங்கினர் தொடக்கத்தில் நாளொன்றுக்கு 500 ரூபாய் கிடைத்ததாகக் கூறுகிறார் மோகன். இன்னிலையில் தாயாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் தானே அடுப்பின் முன் நிற்க தயாரானதாக கூறுகிறார். தனது தாயின் கைப்பக்குவம் தனக்கும் வந்ததோடு தானே வெரைட்டியாக பல வகை தோசைகளை தயாரித்ததாக கூறுகிறார்.

மல்லி தோசை பூண்டு தோசை போன்று பஞ்சவர்ண தோசை சுரைக்காய் தோசை மாங்காய் தோசை பீர்க்கங்காய் தோசை கருணைக் கிழங்கு தோசை காலிபிளவர் தோசை என பல்வேறு தோசைகளை அறிமுகப்படுத்தியதாகவும் அதன் சுவைக்கு வாடிக்கையாளர்கள் பெருகியதாகவும் அவர் கூறுகிறார்.

கம்பு கேழ்வரகு பாசிப் பருப்பு முளைகட்டிய பயிர் உள்ளிட்டவற்றால் பல்வேறு வெரைட்டி தோசைகளையும் தயாரிப்பதாக கூறும் இவர் தரமான பொருட்கள் மினரல் வாட்டர் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவதாக கூறுகிறார். தக்காளி மல்லி காரம் தேங்காய் என விதவிதமான சட்னி வகைகள் உள்ளிட்ட துணை பதார்த்தங்களை தனது தாய் வீட்டில் இருந்தே தயாரித்துக்  கொடுப்பதாகவும் மோகன் கூறுகிறார்.

தனது கடைக்கு சாதாரண வாடிக்கையாளர் முதல் காரில் வரும் பணக்கார வாடிக்கையாளர்கள் வரை பலர் இருப்பதாக கூறும் அவர், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, நடிகர் கருணாஸ், கே சி பழனிச்சாமி உள்ளிட்ட பலரும் தனது வாடிக்கையாளர்கள் என்று கூறுகிறார்

இந்நிலையில் தனது 37வது வயதில் தனக்கு திருமணம் ஆன நிலையில் தந்தை தாய் மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வருவதாகவும் அவர் கூறுகிறார் ஆட்டோ ஓட்டுனராக வறுமையில் உழன்று கொண்டிருந்த தனக்கு தனது நண்பர் செல்வத்திடம் தான் விடுத்த சவாலே முன்னேற்றத்திற்கு வழிவகுத்ததாக கூறும் அவர், செல்வத்துக்கு நன்றியுடன் இருப்பதாக கூறுகிறார்