நீ தலித்..! எங்கள் ஊருக்குள் வரக்கூடாது..! எம்பிக்கே இந்த நிலையா? அதிர வைக்கும் சம்பவம்!

பெங்களூரு: கர்நாடகாவில் எம்பி ஒருவரை ஜாதியை காரணம் காட்டி ஊருக்குள் நுழைய விடாமல் பொதுமக்கள் தடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கர்நாடகா மாநிலம், சித்தர துர்கா மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிட்டு  வெற்றி பெற்றவர் நாராயணசாமி. இவர் பட்டியலினத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதி ஆவார். இந்நிலையில், இவர் தனது தொகுதிக்கு உட்பட்ட பாவாகடா கிராமத்திற்கு ஆய்வு ஒன்றிற்காக, மருத்துவர்கள், மருந்து நிறுவன அதிகாரிகளுடன் சென்றிருக்கிறார்.  

அப்போது அந்த கிராமத்தைச் சேர்ந்த மாற்று சமூக மக்கள் சிலர் எம்பியை வழிமறித்து, பட்டியலினத்தைச் சேர்ந்தவர் தங்கள் ஊருக்குள் வரக்கூடாது என, கண்டனம் தெரிவித்துள்ளனர். இதற்கு எம்பி நாராயணசாமி எதிர்ப்பு தெரிவிக்கவே, அவருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு, நாராயணசாமி அங்கிருந்து பாதியிலேயே கிளம்பிவிட்டார். எம்பியை ஜாதி காரணம் காட்டி ஊருக்குள் நுழைய விடாமல் பொதுமக்கள் தடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி  விரிவான விசாரணை நடத்த அம்மாவட்ட எஸ்பி உத்தரவிட்டுள்ளார். 

இதற்கிடையே இவ்விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள துணை முதல்வர் அஸ்வத் நாராயண், ''மக்களாகிய நாம் அனைவரும் சமம், நமக்குள் எவ்வித பாகுபாடும் இல்லை,'' எனக் கூறியுள்ளார்.