பாலியல் கொடூரத்தால் மயங்கிக்கிடந்த மகள்! மருத்துவமனை உதவி செய்யாததால், மகளை தோளில் சுமந்த தந்தை!

பெல்லாரி: சக்கர நாற்காலி தர மருத்துவமனை மறுத்ததால், மயங்கி கிடந்த மகளை தோளில் சுமந்தபடி சென்ற தந்தையின் வீடியோ வைரலாகி வருகிறது.


கர்நாடகா மாநிலம் பெல்லாரியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுபற்றி டைம்ஸ் ஆப் இந்தியா ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில், குறிப்பிட்ட இளம்பெண்ணை யாரோ சிலர் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதன்பேரில் சுயநினைவை இழந்து, மயங்கி கிடந்த அவரை மீட்டு, அவரது தந்தை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார்.

ஆனால், அந்த பெண்ணால் நடக்க முடியவில்லை என்பதால், அவருக்கு சக்கர நாற்காலி தரும்படி, அவரது தந்தை கேட்டுள்ளார். எனினும், மருத்துவமனை ஊழியர்கள் இது சட்ட சிக்கல் ஏற்படுத்தக்கூடிய வழக்கு என்பதால், சக்கர நாற்காலி தர மறுத்துவிட்டனராம். இதன்பின், அந்த பெண்ணை தோளில் சுமந்தபடி அழைத்துச் சென்று, மருத்துவ சிகிச்சை பெற அவரது தந்தை முயற்சித்துள்ளார்.  

இதுபற்றிய வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக, கூடுதல் விவரங்கள் கிடைக்கவில்லை என்று, டைம்ஸ் ஆப் இந்தியா ஊடக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.