ரூ.1 கோடியில் இருந்து ரூ.100 கோடி! 4 ஆண்டுகளில் 23 வயது ஐஸ்வர்யா செய்த மாயம்! யார் இவர்?

பெங்களூரு: முறைகேடாக சொத்து சேர்த்த புகாரில் கர்நாடகா மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் மகள் ஐஸ்வர்யா சிக்கியுள்ளார்.


கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக சிவக்குமார் உள்ளார். அவரை சமீபத்தில்  வரி ஏய்ப்பு மற்றும் ஹவாலா பணப்பரிமாற்ற விவகாரத்தில் அமலாக்கத்துறையினர் கைது செய்து, விசாரிக்கின்றனர்.

இந்நிலையில், அவரது மகள் ஐஸ்வர்யாவுக்கு 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் எப்படி கிடைத்தன என்ற சந்தேகத்தின் பேரில் அவரையும் விசாரணைக்கு, அமலாக்கத்துறை அழைத்துள்ளது. இதற்கான விசாரணையில் டெல்லி வந்து, ஐஸ்வர்யா நேரில் இன்று (செப்டம்பர் 12) ஆஜரானார்.

அவரிடம் சிங்கப்பூரில் செய்த முதலீடுகள் பற்றி விரிவான வாக்குமூலம் பெற்ற அதிகாரிகள், இதுதொடர்பான முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளனர். சிவக்குமார் நடத்தும் கல்வி அறக்கட்டளையின் மேற்பார்வையாளராக ஐஸ்வர்யா உள்ளார். இந்த அறக்கட்டளைக்கு சொந்தமாக கர்நாடகாவில் கல்வி நிறுவனங்களும், கோடிக்கணக்கான மதிப்புடைய சொத்துகளும் உள்ளன.

கடந்த 2013ம் ஆண்டில் ரூ.1 கோடி மதிப்புடைய சொத்துகள்தான் ஐஸ்வர்யா பெயரில் இருந்தன. இந்நிலையில், 2017ம் ஆண்டு சிங்கப்பூர் சென்ற சிவக்குமார் மற்றும் அவரது மகள் ஐஸ்வர்யா அங்கே ஏராளமான முதலீடுகளை செய்ததாகவும், அங்கிருந்து முறைகேடான வழியில் இந்தியாவில் தங்களது சொத்துகளை அதிகரித்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.  

காங்கிரஸ் கட்சித் தலைவர் குடும்பமே விசாரணை வளையத்தில் சிக்கிய விவகாரம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.