மீண்டும் அதிமுக! எடப்பாடிக்கு தூது விடும் கராத்தே தியாகராஜன்! ரஜினி வீட்டிலும் ஒரு துண்டு!

காங்கிரஸ் கட்சிக்குள் இருந்தபடி தி.மு.க. கூட்டணிக்கு உலைவைத்த கராத்தே தியாகராஜனுக்கு ஒருவழியாக சஸ்பென்ட் ஆர்டர் போட்டுவிட்டது கட்சி மேலிடம். இதுகுறித்து இன்று முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தைப் பார்த்து நியாயம் கேட்டிருக்கிறார்.


இன்று காங்கிரஸ் கட்சி இருக்கும் நிலையில், தி.மு.க.வை பகைப்பது மகா பாபம். தேவையில்லாத வேலைகளை செய்யாதே என்று அவரும் கடுமையாக பேசி அனுப்பிவிட்டார். அதனால் கோபமான தியாகராஜன், இனிமேல் நம்மை எப்படியும் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியே அனுப்பிவிடுவார்கள் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்.

அதனால், போகும்போது மேலும் சில தலைகளை உருட்டிவிட்டுப் போகலாம் என்றுதான் கோபண்ணாவின் ஊழல்களை வெளியே எடுத்துவிட்டாராம். இது கோபண்ணாவுடன் நிற்கப் போவதில்லையாம். மேலும் சில காங்கிரஸ் பெருந்தலைகளின் அந்தரங்கங்களையும் அள்ளிவிடப் போகிறாராம்.

அதே நேரத்தில் தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கிறார். ஜெயலலிதாவால் தலைமறைவுக் குற்றவாளியாக தேடப்பட்ட கராத்தே தியாகராஜன், இப்போது வழியே இல்லாமல் எடப்பாடியிடம் கெஞ்சிக்கொண்டு இருக்கிறார். அதே சமயம், ரஜினிகாந்த் கட்சி அறிவிப்பு வெளியிட்டால், அதில் தஞ்சம் அடையும் எண்ணமும் இருக்கிறதாம்.

அதனால், ரஜினி சென்னை வந்த தகவல் அறிந்து தகவல் அனுப்பியிருக்கிறார், இதுவரை ரஜினியிடம் இருந்து அழைப்பு இல்லை. எந்தக் கட்சியிலும் இல்லை என்றால், பஞ்சாயத்துகள் எதுவும் செய்து பணம் சம்பாதிக்க முடியாது. அதனால் கூடிய சீக்கிரம் எடப்பாடி காலில் விழுந்து அ.தி.மு.க.வினராக மாறுவார் என்கிறார்கள்.