உப்புமாவில் விஷம்! மனைவியை வித்தியாசமான முறையில் போட்டுத் தள்ளிய பேராசிரியர்!

மனைவிக்கு உப்புமாவில் விஷம் வைத்து கொலை செய்த பேராசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர்.


கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள வெள்ளியோடு கிராமத்தை சேர்ந்தவர் பெல்லார்மின். இவர் பொறியியல் கல்லூரி ஒன்றில், பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

பெல்லார்மினுக்கும் மற்றொரு பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வந்த திவ்யா என்பவருக்கும் கடந்த 2017ம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் பெல்லார்மினுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் திவ்யாவை விவாகரத்து செய்துவிட்டு, தான் காதலிக்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்ள பெல்லார்மின் திட்டமிட்டுள்ளார். ஆனால் திவ்யா விவாகரத்துக்கு ஒப்புக் கொள்ளவில்லை.

இந்த நிலையில் திவ்யா தனது வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் விஷம் அருந்தியதாக கூறியுள்ளனர்.

இது குறித்து விசாரித்த போது கணவன் பெல்லார்மின் கொடுத்த உப்புமாவை சாப்பிட்டதாகவும் அதன் பிறகு மயங்கியதாகவும் திடுக் தகவலை வெளியிட்டுள்ளார். பிறகு சிகிச்சை பலனின்றி திவ்யா உயிரிழந்துள்ளார்.

விசாரணையில் மனைவி விவாகரத்துக்கு ஒப்புக் கொள்ளாத காரணத்தினால் அவர் சாப்பிட்ட உப்புமாவில் விஷம் கலந்ததை பெல்லார்மின் ஒப்புக் கொண்டார். இதனை அடுத்து அவரையும் அவரது பெற்றோரையும் போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்காதலியை திருமணம் செய்ய கட்டிய மனைவிக்கு உப்புமாவில் விஷம் வைத்த பெல்லார்மின் செயலால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.