வாக்குச்சாவடியை கைப்பற்றுவோம்! தொண்டர்களை உசுப்பேற்றும் அன்புமணி! கண்டு கொள்ளாத தேர்தல் ஆணையம்!

காஞ்சிபுரம்: ''வாக்குச்சாவடியை கைப்பற்றி நமது பலத்தை நிரூபியுங்கள்,'' என்று, பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் சொன்னதாக, தகவல் பரவி வருகிறது.


நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் 2019 தற்போது தீவிரம் அடைந்துள்ளது. இதில், அஇஅதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமக வட மாவட்டங்களில், முழு வீச்சில் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.  இதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், தேர்தல் பணி கூட்டம், பாமக சார்பாக, நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், ''நமது கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளுமே வாக்கு வங்கி உள்ள கட்சிகளாகும். எதிர்க்கட்சிகளில் திமுக.,விற்கு மட்டுமே வாக்கு வங்கி உள்ளது. மற்ற கட்சிகள் பலவீனமானவை. அதைப் பற்றி நமக்கு கவலையில்லை. நமது முதல் வேலை, தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடிகளை எப்படியேனும் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும். நான் சொல்வது புரிகிறதா?

தேர்தல் நாளன்று, நம் கட்சி நிர்வாகிகள், அவரவர் சார்ந்த வாக்குச்சாவடிகளில் முழு பலத்தை பிரயோகித்து, களப்பணி ஆற்ற வேண்டும். குறிப்பாக, காஞ்சிபுரம் மக்களவை தொகுதி வேட்பாளர்  மரகதம் குமரவேல், திருப்போரூர் சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் ஆறுமுகம் ஆகியோர் வெற்றிபெறுவதற்காக, நமது முழு பலத்தையும் கட்சி நிர்வாகிகள் பயன்படுத்த வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன்,'' எனக் குறிப்பிட்டுள்ளார். 

இந்த செய்தியை, ஆங்கில இணையதளம் ஒன்று வெளியிட்டுள்ளது.