பிடியரிசி பள்ளியில் 6ம் வகுப்பு மட்டுமே படித்த காமராஜருக்கு ஆங்கிலம் தெரியுமா?

காமராஜரை படிக்காத மேதை என்பார்கள். அவர் பள்ளிப்படிப்பு முடிக்கவில்லை என்பது உண்மைதான், ஆனால், படிப்பறிவு இல்லையென்று சொல்லமுடியாது. ஏனென்றால், அவர் படித்த பிடியரிசிப் பள்ளிக்கூடம் அப்படிப்பட்டது.


விருதுநகரில் 1885-ல் துவக்கப்பட்ட க்ஷத்திரிய வித்தியாசாலை பள்ளிக்கு தனித்துவம் உண்டு. ஆம், இந்தப் பள்ளியைத் துவங்க விருது நகர் வியாபாரிகள் தங்களது வியாபார மகமைப் பணத்தைக் கொடுத்துப் பெரிதும் உதவினர். மகமைப் பணத்தோடு ஊர்கூடித் தேர் இழுக்கப்பட்டது. ஊர் மக்கள் ஒவ்வொரு வீட்டுப் பெண்மணிகளும் பள்ளிக்கு உதவினார்கள். 

பள்ளிக்கூடச் செலவுக்காக ஒவ்வொரு நாளும் வேளையும் சமையல் செய்ய உலையில் அரிசி போடும்போது முதலில் ஒரு கைப்பிடி அரிசியை எடுத்துத் தனியாக ஒரு பானையில் போட்டு சேமித்தனர். இதை எல்லா வீட்டிலும் செய்தனர். சிறு துளி பெருவெள்ளமாகி மூட்டை மூட்டையாக அரிசி சேர்ந்தது. மலையென ஓங்கி உயர்ந்த அரிசி மூட்டைகள் விற்கப்பட்டன. பள்ளிச் செலவுக்கு பணம் கிடைத்தது. 

பிடி அரிசியின் மகிமை பெரிது. மிகமிகப் பெரிது. இந்தப் பள்ளியில்தான் காமராஜ் படித்தார். ஆறாம் வகுப்பு வரை அப்பள்ளியில் அவர் பெற்ற அனுபவங்கள் அவரைப் புடம் போட்டன.

ஆறாம் வகுப்பு வரை அந்தப் பள்ளியில் ஆங்கில மீடியத்தில் படித்து,  நல்ல மதிப்பெண்களும் பெற்றவர் காமராஜர். அதன்பிறகு குடும்ப சூழல் காரணமாகவே படிப்பைத் துறந்தார். ஆகவே அவருக்கு ஆங்கிலம் நன்கு படிக்க வரும். பிறகு வாழ்க்கை என்னும் பள்ளியில் படித்து ஏட்டுப் படிப்பு படித்தவர்களை விட அறிவில் சிறந்து விளங்கியவர்.