குடும்பத் தலைவிக்கு சம்பளம் தரச் சொல்கிறார் கமல்ஹாசன்..! அதுசரி, அவருக்குத்தான் அந்தக் கவலை இல்லையே!

குடும்பத்தலைவி பொருளீட்டல் திட்டம் என ஓர் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார் கமல்ஹாசன்.


இது செயல்படுகிறதோ இல்லையோ, தேவையில்லாத சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. கமல் எதிர்பார்ப்பதும் அதுதானோஎன்னவோ. இதோ, அந்த திட்டம் குறித்து கமலுக்கு நெருக்கான ஒரு பத்திரிகையாளரின் பதிவு இது. 

விடிந்தது முதல் நள்ளிரவு வரை ஒருவர் வேலை செய்த வண்ணம் இருக்கிறார் என்றால் அவர் ஒரு குடும்பத்து பெண்மணியாகத்தான் இருக்க முடியும். வீட்டு வேலைகள், செய்து தீராதவை. அலுவலக வேலைக்கு நேரமும் காலமும் உணடு. அதில் விடுப்பும் கிடைக்கும். ஓய்வும் கிடைக்கும். ஆனால், வீட்டு வேலைகள் எந்நேரமும் இருந்து கொண்டே இருக்கும். ஓய்வு ஒழிச்சல் அற்ற பணி அது. செய்து மாளாது.

அப்படி ஓயாமல் ஒழியாமல் வேலை செய்து கொண்டே இருக்கும் ஒரு குடும்பப் பெண்ணுக்கு அந்த குடும்பம் என்ன கொடுக்கிறது? மேலும் மேலும் வேலையைத்தான் கொடுத்துக் கொண்டு இருக்கிறது. அன்றைக்கு முடியாத வேலைக்காக அந்தப் பெண் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாக்கப்படுவது மட்டுமே தொடர்கிறது.

தனது டிரைவருக்கு சம்பளம் கொடுக்கும் ஒரு குடும்பத் தலைவர் தனது மனைவிக்கு ஒரு பொருளாதார பங்களிப்பை செய்ய வேண்டும் என்று சிந்திப்பது உண்டா? பிச்சைக்காரருக்குக் கூட பொருள் அளித்து தனக்கான புண்ணியத்தை தேடிக் கொள்ளும் ஒரு குடும்பத் தலைவர் தனது மனைவிக்கான ஊதியம் குறித்து சிந்தித்தது உண்டா?

ஒவ்வொரு குடிமகரும் பொருளாதார பாதுகாப்பை பெற வேண்டும் என்ற குறிக்கோளை எட்ட வேண்டுமானால் முதல் வேளையாக ‘குடும்பப் பணி’ செய்யும் மகளிருக்கு பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அந்தக் குறிக்கோளை அடைய இங்கிருந்துதான் தொடங்க வேண்டும். ‘மக்கள் நீதி மய்யம்’ அந்தப் புரட்சிப் பாதையில் முதல் அடியை எடுத்து வைத்து இருக்கிறது. தாய் வயிற்றில் பிறந்த, தாயை வணங்குகிற ஒவ்வொரு மகனும் மகிழும் தருணம் இது என்று சொல்கிறார்.

கமல்ஹாசன் அடுத்தவருக்குத்தானே இந்தத் திட்டத்தைக் கொண்டுவருகிறார். குடும்பப் பெண்கள் எப்படியெல்லாம் பணத்தை காலி செய்கிறார்கள் என்பது அவருக்குத் தெரியுமா என்று எதிர்க் கேள்வியும் சிலர் கேட்கிறார்கள்.

சரியான கேள்விதான்.