எம்.ஜி.ஆர். எங்கள் சொத்து. வம்பிழுக்கும் கமல்ஹாசனுக்கு அ.தி.மு.க. பதிலடி

திடீரென கடந்த ஞாயிறு அன்று, ’சீரமைப்போம் தமிழகத்தை’ என்ற முழக்கத்துடன் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். அந்த பிரசாரத்தின் போது, எம்.ஜி.ஆர். ஆட்சியை அமைப்போம். மதுரையை இரண்டாம் தலைநகரமாக மாற்றுவோம் என்று கூறினார் கமல்ஹாசன்.


காமராஜர் ரோட்டில் உள்ள தொழில் வர்த்தக சங்க அரங்கில் மாணவர்கள், இளைஞர்கள், பெண்களுடன் கமல்ஹாசன் கலந்துரையாடிய நேரத்தில், கலாச்சார நகரமான மதுரையை அழித்துவிட்டார்கள். மதுரையை மாற்றிக்காட்ட வேண்டும் என்பதே நாம் எடுக்கும் உறுதிமொழி. மதுரையை இரண்டாம் தலைநகராக மாற்றியே தீருவோம். மதுரையில் மீண்டும் ஒரு புரட்சிக்கு நாம் தயாராக வேண்டும்

ஊழல் பேர்வழிகளை ஒழித்துக்கட்டவேண்டிய நேரம் வந்துவிட்டது. * நீங்கள் ஆணையிட்டால் உங்களை நான் காப்பாற்றுவேன். நமது ஆட்சியமைவது உறுதி. எம்.ஜி.ஆரின் தொடர்ச்சி நான். எம்.ஜி.ஆரின் கனவை நிறைவேற்றி காட்டுவேன். நற்பணி செய்தால் போதும் என என்னால் இருக்கமுடியவில்லை அதனால் அரசியலுக்கு வந்துவிட்டேன்

மக்களின் குறைகளை தேடி வந்து தீர்ப்பதே எங்களின் அரசியல் நோக்கம் . காந்தி மற்றும் பெரியார் ஆகியோர் வாக்கு அரசியலில் ஈடுபடவில்லை.. இளைஞர்கள் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்திக்காட்டவேண்டும். .எங்கள் கட்சியின் கொள்கையும் லட்சியமும் ஒன்றே ஒன்று தான்... அதுவே நேர்மை என்று தெரிவித்தார்.

ஏற்கெனவே ரஜினிகாந்த், பா.ஜ.க. இரண்டுமே எம்.ஜி.ஆர். ஆட்சி என்ற கொடியை உயரப் பிடித்துள்ளனர். இந்த நிலையில் கமல்ஹாசனும் இப்படி பேசுவதற்கு அ.தி.மு.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வின் சொத்து, தேவையில்லாமல் எவரும் பேசினால், கடும் பின்விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கை செய்துள்ளனர்.

பிரசாரத்துக்கு மூன்று நாள் கால்ஷீட் கொடுத்து வந்திருக்கும் கமல்ஹாசனுக்கு, இந்த எச்சரிக்கை போதுமா?