உங்கள் போட்டியில் விவசாயிகளை பகடைக் காய் ஆக்காதீர்கள்..! ஆவேச குரல் எழுப்பும் கமல்ஹாசன்..!

உலகமே பசுமை விவசாயத்தை நோக்கி திரும்பிக்கொண்டிருக்கும் வேளையில், தமிழக விவசாயிகளை 8 வழிச்சாலை, நெடுவாசலில் ஹைட்ரோகார்பன், கொள்முதல் விலை, கடன் பிரச்சினை, மின்சார சட்ட திருத்த மசோதா - 2020 என போராடிக் கொண்டேயிருக்கும் நிலையில் வைத்திருப்பது யார் தவறு என்று கமல்ஹாசன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.


மின்சார சட்ட திருத்த மசோதா - 2020, விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தைகுறிவைக்கிறது. பல்லாண்டு போராட்டங்களுக்கு பின் விளைவிப்பவர்களுக்கு கிடைத்திருக்கும் உதவி இலவச மின்சாரம்.

கடந்த 4 வருடங்களாக புதிய இணைப்புக்களை வழங்காமல், தட்கல் முறையில் மட்டுமே 4இலட்சம் ரூபாய் கட்டி, புதிய இணைப்பு எடுக்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். மூலப்பொருட்கள் விலை உயர்வு, தண்ணீர் தட்டுப்பாடு, நிலையில்லா கொள்முதல் விலை என ஏற்கனவே பலமுனைகளில் போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகள் மேல் இந்தச்சுமையையும்ஏற்றத்துடிக்கிறது இந்த அரசு. 

விளைவிப்பவர்களின்வாழ்க்கைப் போராட்டத்தை அதிகப்படுத்தாமல், அவர்களை சிரமத்தில் ஆழ்த்தும் மின்சார சட்ட திருத்த மசோதா - 2020ஐ திரும்ப பெற வேண்டும். பெயரளவில் பாதிப்புக்கள் வராது என அறிவிக்காமல் அதை அரசு உத்தரவாக செயல்படுத்த வேண்டும். 

பொருள் ஈட்டும் உங்கள் போட்டியில் விவசாயிகளை பகடைக் காய் ஆக்காதீர்கள். விவசாயிகளுக்காக, அவர்களது உரிமையை பாதுகாக்க, எம் குரலும் ஓயாது ஒலிக்கும் என்று குரல் கொடுத்திருக்கிறார் கமல்ஹாசன்.