மயிரிழையில் உயிர் தப்பினேன், கடைநிலை ஊழியரைக் காப்பது கடமை - கமல் பேட்டி

இந்தியன் -2 படத்தின் படப்பிடிப்பில் காயமடைந்தவர்கள் சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.


அவர்களை இன்று பிற்பகல் அப்படத்தின் கதாநாயகன் கமல் நேரில் நலம்விசாரித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களையும் சந்தித்தார். அப்போது அவர், நேற்று இரவு இறந்துபோன மூவர் மற்றும் காயமடைந்து சிகிச்சைபெற்றுவரும் அனைவரின் குடும்பத்தினருக்குமான ஒரு உதவித்தொகையாக தன் சார்பில் ஒரு கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்தார்.

” நான் இங்கு வந்தது, ஒரு நிறுவனத்துக்காக வரவில்லை. இது, என் குடும்பம். சிறு வயதிலிருந்தே இந்தத் தொழிலில்தான் இருக்கிறேன். இதில் இருக்கவேண்டிய பாதுகாப்பு இல்லை என்பதை நிரூபிக்கும் அசம்பாவிதம் இங்கு நடந்திருக்கிறது. இனி இதைப்போல நடக்காமல் இருப்பதற்கு இந்தத் துறை எடுக்கவேண்டியுள்ளது.

சில நூறு கோடிகள் என மார்தட்டிக்கொள்ளும் நாம், கடைநிலை ஊழியனுக்கான பாதுகாப்பை அளிக்கமுடியாமல் இருப்பது அவமானத்துக்கு உரியது. தனிப்பட்ட நபராக எனக்கு அவமானமாக இருக்கிறது. என்னால் இயன்றதை இந்த குடும்பங்களுக்கு காயம்பட்டவர்களுக்கு ஒரு கோடி ரூபாயை அளிக்கிறேன். இது இழப்பீடு அல்ல. மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நானும் விபத்தில் மாட்டிக்கொண்டேன்.

அதனால் எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை அறிவேன். இவர்களுக்கான அளிக்கும் தொகை சேதத்துக்கான பரிகாரமாக ஆகவே ஆகாது. அவர்களின் குடும்பத்தை பாதுகாக்கவும் அடிபட்டவர்கள் வேலையில்லாத காலத்தில் கரையேறுவதற்குமான முதலுதவியாகத்தான் இருக்கும். சிகிச்சை என்பது கடைநிலை ஊழியருக்கான பாதுகாப்பு, காப்பீடு இருக்கவேண்டும். முழுத் துறையும் இதில் பங்குபெறுவது கடமை.

இந்த நேரத்தில அதைச் சொல்லிக்கவிரும்பலை. இந்த அறைக்குள் நானும் இருந்திருக்கக்கூடும். மயிரிழையில் உயிர்தப்பிய கதைதான். நாலு நொடிக்கு முன்னால் இயக்குநர் தள்ளிப் போயிட்டாரு. ரொம்ப அதிர்ஷ்டம். ஒளிப்பதிவாளரும் தள்ளிப்போயிட்டார். எந்த கூடாரம் நசுங்கியதோ அந்தக் கூடாரத்தில நான் இருக்கேன்.. கதாநாயகியும்.. கடைநிலை ஊழியருக்கும் பாதுகாப்பு கொடுக்கவேண்டிய கடமை எந்தத் தொழிலுக்கும் உண்டு. “ என்றார் கமல்.

பாதுகாப்புக் குறைபாடுக்கு என்ன காரணம் என நினைக்கிறீர்கள் என ஒரு செய்தியாளர் கேட்டதற்கு, அதற்கு நேரடியாக பதில் அளிக்காத கமல், “இது எல்லா துறைகளிலும் இருக்கிறது. இப்படி நிகழாமல் வரும்முன் தடுக்கவேண்டும். எங்கள் துறையிலும் நாங்கள் செய்யவேண்டும். “ என்று விவரித்தார்.