கடைசி காலத்துல என்னத்த கொண்டு போகப்போறோம்! 1 இட்லி 1 ரூபா தான்! நெகிழ வைக்கும் கமலா பாட்டி கடை!

கோவை மாவட்டம் பேரூர் அருகே 1 ரூபாய்க்கு 1 இட்லி விற்பனை செய்து அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார் ஒரு பாட்டி.


தமிழகத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மா உணவகம் திட்டம் கொண்டு வந்து 1 ரூபாய்க்கு 1 இட்லி என அறிவித்தபோது உலகம் எங்கும் பேசப்பட்டது. அந்த மலிவு விலை உணவு விற்பனை திட்டம் இந்தியாவில் பிற மாநிலங்களிலும் பின்பற்றத் தொடங்க உள்ளனர். ஏழை எளிய மற்றும் கூலித்தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் என லட்சக்கணக்கானோர் தமிழகம் உள்ள அம்மா உணவகங்களுக்கு சென்று இன்றும் வயிறரா உண்டு வருகின்றனர்.  

அம்மா உணவகம் தொடங்குவதற்கு முன்னரே ஒரு ரூபாய்க்கு ஒரே இட்லி என்ற திட்டத்தை கோவை மாவட்டம் பேரூர் தாலுக்கா வடிவேலாம்பாளையத்தில் வசித்து வரும் பாட்டி தொடங்கி விட்டார். பாட்டி பெயர் கமலா. 80 வயதை கடந்துவிட்டாலும் இன்றும் இளமங்கை போல சுறுசுறுப்புடன் தான் நடத்தும் சிற்றுண்டியை கவனித்து வருகிறார்.

ஓயாமல் உழைக்கும் கமலா பாட்டி பல வருடங்களாக ஒரு ரூபாய்க்கு மட்டுமே இட்லி விற்பனை செய்வதாக அங்குள்ள பொதுமக்கள் வாடிக்கையாளர்கள் பெருமையுடன் பேசுகின்றனர். 30 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு இட்லி 50 பைசாவுக்கு விற்பனை செய்து வந்த கமலா பின்னர் எவ்வளவோ விலைவாசி உயர்ந்துவிட்டாலும் ஒரு ரூபாய்க்கு மேல் இட்லி விற்பதில்லை என தீர்க்க முடிவோடு உள்ளார்.

அதற்கான அவசியமும் எனக்கில்லை என சொல்கிறார் பாட்டி. இது குறித்து அவரது மகனும் நாங்கள் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அவர் முடிவில் இருந்து மாறவில்லை என சொல்கிறார். ஏழு, ஐந்து, மூன்று நட்சத்திர விடுதிகள் போல் ஏசி, நாற்காலிகள், மேஜைகள் அரைகுறையாக ஆங்கிலம் பேசும் சர்வர்கள் யாரும் இல்லாமல் மிக அமைதியாக செயல்பட்டு வருகிறது பாட்டி சிற்றுண்டி. 

விலை குறைவு என்பதற்காக உணவின் தரத்தில் எந்த விதத்திலும் சமரசம் செய்து கொள்வதில்லை கமலா பாட்டி. அவர் கடைக்கு ஒருமுறை வரும் வாடிக்கையாளர்கள் பின்னர் வேறு எங்கும் செல்வதில்லை என்பது கூடுதல் தகவல். காலை 6 மணியில் இருந்து நண்பகல் 12 மணி வரை அடுப்பு முன்னால் அமர்ந்து அனலில் உழைக்கிறார் கமலா பாட்டி. இட்லிக்கு துணையாக கடலை மாவு போண்டா 2.50 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார். 

தமிழகம் முழுவதும் “அம்மா உணவகம்” என்றால் கோவை மாவட்டத்துக்கு மட்டும் “பாட்டி உணவகம்” இல்லை இல்லை “கமலா உணவகம்” என்று நாம் பெருமையாக அழைக்கலாம் .