சென்னை, கொங்கு மண்டலத்தில் கெத்து காட்டிய கமல்! 3வது பெரிய கட்சியான மநீம!

சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளிலும், கொங்கு மண்டலத்திலும் வாக்குகளை குவித்து மக்கள் நீதி மய்யம் தமிழகத்தின் 3வது பெரிய கட்சியாகியுள்ளது.


ஜெயலலிதா மறைவுக்கு பிறகு திடீரென அரசியல் களம் புகுந்து நாடாளுமன்ற தேர்தலை முதல் முறையாக எதிர்கொண்டார் கமல். மொத்தம் உள்ள 40 தொகுதிகளுக்கும் வேட்பாளரை அறிவித்தார். அனைத்து தொகுதிகளுக்கும் பிரச்சாரத்திற்கு சென்று தூள் கிளப்பினார். அவர் செல்லும் இடங்களில் பெரிய அளவில் கூட்டம் கூடவில்லை.

ஆனால் கமல் பிரச்சாரத்திற்கு ஊடகங்கள் முக்கியத்துவம் அளித்தன. இந்த நிலையில் நேற்று தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் கமலின் கட்சி கணிசமான வாக்குகளை பெற்றுள்ளது. மத்திய சென்னையில் மட்டும் மநீம வேட்பாளர் 11 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார்.

இதே போல் வட சென்னையில் சுமார் 10 சதவீத வாக்குகளை பெற்று 3வது இடத்திற்கு வந்தார். தென் சென்னையில் மநீம வேட்பாளர் பட்டய கிளப்பினார். மொத்த வாக்குகளில் 12 சதவீத வாக்குகளை அள்ளினார். இதே போல் கொங்கு மண்டலத்திலும் கமல் கட்சி கெத்து காட்சியது. கொங்கு மண்டலத்திற்கு உப்ட்ட கோவையில் சுமார் 11.63 சதவீத வாக்குகளை மநீம வேட்பாளர் பெற்றார்.

இதே போல் பொள்ளாச்சி, திருப்பூர் போன்ற நகரங்களில் கமல் வேட்பாளர்கள் கணிசமான வாக்குகளை பெற்றனர். குறிப்பாக முக்கிய நகரங்களில் கமல் கட்சி வேட்பாளர்கள் அதிக வாக்குகளை பெற்றனர். ஒட்டு மொத்தமாக 6 முதல் 7 சதவீத வாக்குகளை கமல் கட்சி பெற்று இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல் சுமார் 12 தொகுதிகளில் கமல் கட்சி 3வது இடத்தை பிடித்துள்ளது.

இதன் மூலம் நடந்து முடிந்ததேர்தலின் அடிப்படையில் கமலின் கட்சி தமிழகத்தில் திமுக - அதிமுகவிற்கு அடுத்து 3வது கட்சியாகியுள்ளது. அதாவது விஜயகாந்த் இடத்தை கமல் பிடித்துள்ளார். விஜயகாந்த் அளவிற்கு வாக்கு சதவீதத்தை பெறவில்லை என்றாலும் அந்த கட்சி இருந்த இடத்திற்கு முன்னேறியுள்ளார்.