கோவை சரளாவுக்கு வக்காலத்து வாங்கும் கமல்ஹாசன்!! கமீலாவுக்கு கல்தா?

மக்கள் நீதி மய்யக் கட்சியின் கடலூர், நாகை மண்டல பொறுப்பாளராக இருந்தவர் சி.கே.குமரவேல். தன்னிடம் கமல்ஹாசன் போன் நம்பர்கூட இல்லை என்ற கோபத்திலும் கோவை சரளா நேர்காணல் நடத்திய அவமானத்தையும் தாங்கமுடியாமல் கட்சியில் இருந்து வெளியேறினார்.


ஆனால், அவர் தலைமை அறிவிக்கும் முன்னரே தேர்தல் வேலை செய்யத் தொடங்கியதை கமல் கண்டித்த காரணத்தாலே, பதவி விலகினார் என்றும் கூறப்படுகிறது. கமீலா நாசரும் சென்னையில் தேர்தல் வேலை செய்துவரும் நிலையில் குமரவேலை மட்டும் கண்டிக்கலாமா என்றும் குரல்கள் எழுந்தன,.

இந்த நிலையில் குமரவேலு சமாச்சாரத்துக்கு விளக்கம் கொடுப்பது போன்று மக்கள் நீதி மய்யத்தில் இருந்து ஒரு கேள்வி பதில் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் கோவை சரளாவுக்கு ஜால்ரா போட்டிருக்கிறார் கமல்ஹாசன்.

கே: இரண்டு நாட்களுக்கு முன்பாக கட்சியில் சேர்ந்த கோவை சரளா வைத்து நேர்காணல் செய்தது ஏன்? 

ப: கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் பலரும் விருப்பமனு அளித்திருந்த நிலையில் அவர்களை வைத்தே நேர்காணல் நடத்துவது ஒரு தலைபட்சமாக அமையும். எனவே கட்சி சாராத பொது மனிதர்களும், கட்சியின் செயற்குழுவில் இல்லாத நபர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். பத்திரிகையாளர் மதன், கோவை சரளா ஆகியோர் அதனடிப்படையிலேயே பங்குபெற்றனர். இதில் வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகள் எனப் பலரும் இடம்பெற்றனர். 

கே: கட்சியில் வெளிப்படைத்தன்மை இல்லை என்கிறார்களே? 

ப: தேர்தல் குறித்த செயற்குழு விவாதத்தில் பொது மனிதரான இயக்குநர் அமீர், நேர்காணலில் பத்திரிகையாளர் மதன் உட்பட வெளியாட்களும் பங்குபெறுகின்றனர். கட்சி சாராதவர்களும் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்து நேர்காணல் செய்யப்பட்டனர். இதைவிட வெளிப்படைத்தன்மை என்ன வேண்டும்?

கே: குமரவேல் போட்டியிடுகிறார் என்று சொன்னது தவறு என்றால் கமீலா நாசர் செய்ததும் தவறுதானே? 

ப: கமீலா நாசர் இதைத் தெரிவிக்கவில்லை. சில கட்சி உறுப்பினர்களும், அவருக்காக விருப்பமனு செய்தவர்களும் இப்படிச் செய்தனர். உடனடியாக 'கட்சி எந்த முடிவும் எடுக்கவில்லை; அதிகாரப்பூர்வ அறிவிப்பு வராத நிலையில் இதுபோன்ற செயல்களைக் கண்டிப்பாக தவிர்கவும்', என்று கட்சியினருக்கு குரல்பதிவு அனுப்பியிருந்தார். 

கே: உட்கட்சி அரசியல் இருக்கிறதா? 

ப: எந்த ஒரு அமைப்பிலும் இரண்டு தனிநபர்களுக்கிடையே ஒத்த சிந்தனைகள் இருக்கமுடியாது. முரண்களைக் கடந்து பொது சிந்தனையுடன் நடைபோடுவதே ஜனநாயகம். அதைவிடுத்து தனிமனிதர்களை திருப்திப்படுத்த கட்சி நடத்தமுடியாது. நேர்மையான அரசியலை முன்னெடுக்கும் எவரையும்  சாதி, மத, இன,  மொழி, கல்வித்தகுதி என அனைத்தும் கடந்து அரவணைத்துக் கொள்ளும் மக்கள்நீதிமய்யம்.

ஆமா, இந்தக் கேள்வி பதிலுக்கும் குமரவேலு விலகலுக்கும் என்ன சம்பந்தம், எதுவுமே புரியலையே என்று சொல்கிறீர்களா... அதுதாங்க கமல்ஹாசன்.