குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் இரண்டாவது நாளாக உள்ளிருப்பு போராட்டம் நடத்திவருகிறார்கள்.
பல்கலைக்கழகத்தில் நுழைந்த கமல்ஹாசன்..! போராட்ட மாணவர்கள் உற்சாகம்

திடீரென அவர்களை நேரில் சென்று சந்தித்தார் கமல்ஹாசன். உடனே மாணவர்கள் பெரும் உற்சாகத்திற்கு மாறினார்கள்.
நானும் ஒரு மாணவன் என்றபடி மாணவர்களை சந்திக்க உள்ளே நுழைந்தார் கமல்ஹாசன். மாணவர்களை உடனே இடத்தை காலிசெய்து வீட்டுக்குப் போகுமாறு நிர்வாகம் கூறியதை கமலிடம் சொன்னார்கள்.
மாணவர்களை படிக்கும் இடத்திலேயே அகதிகளாக்குகிறது அரசு. ஐரோப்பிய சர்வாதிகார நாடகம் மீண்டும் நடக்கிறது. இன்றைய செய்தி நாளைய சரித்திரம். அதனால் மாணவர்களை அகதிகளாக்குவதற்கு விட மாட்டோம். இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் சுமார் 800 மாணவர்களுக்கும் பதில் சொல்லவேண்டியது அரசின் கடமை. மாணவர்களுக்கு மக்கள் நீதி மய்யத்தின் ஆதரவு உண்டு என்று தெரிவித்தார்.
இந்த சட்டத்தை அரசு திரும்பப்பெற வேண்டும். சட்டங்கள் மக்களுக்குப் பயன்படாது என்றால் அவை மாற்றப்பட வேண்டும். பேச்சுக்கு இடம் இல்லை என்பதாலே கண்ணீர் புகைகுண்டு வீசப்படுகிறது. மக்களின் சக்தியை அரசு புரிந்துகொள்ள வேண்டும் என்று அரசுக்கு எச்சரிக்கை செய்திருக்கிறார் கமல்.
இந்த மாணவர்களை மற்ற கட்சித்தலைவர்கள் யாரும் சந்தித்துப் பேசுவதற்கு முன்பு நேரில் களம் இறங்கி கமல் கோல் அடித்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். கமல் பேசிவிட்டார், ரஜினி இன்னமும் இந்த விஷயத்தில் கருத்துகூட சொல்லவில்லை. இன்னும் எத்தனை காலம்தான் அவர் வேடிக்கை பார்ப்பாரோ...?