கமல்ஹாசனுக்கு உண்மை புரிஞ்சிடுச்சா.? தமிழக மக்கள் அரசியல் தலைவராக என்னை ஏற்கவில்லை-ன்னு கமலே அப்பட்டமா சொல்லிட்டாரு!

கமலஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு நான்கு கதாநாயகிகளுடன் விரைவில் வெளி நாடுகளில் துவங்க இருப்பதாக செய்தி வந்திருக்கிறது.


இரண்டு நாட்கள் முன்பு கமலஹாசன் தானே எழுதி , இரட்டை வேடங்களில் நடித்து, இயக்கும் தலைவன் இருக்கிறான் படம் துவங்குவதாகவும், அதற்கு 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்க இருப்பதாகவும் செய்தி வந்தது. ரகுமானும் இதுபற்றி. ட்வீட் செய்திருந்தார். ஏற்கனவே தசாவதாரம் புகழ் 'நாயுடுவை' ஹீரோவாக்கி கமல், ரம்யா கிருஷ்ணன் ஸ்ருதிஹாசன் நடித்த சபாஷ் நாயுடுவும் தொடர்கிறது. இத்தனை படங்கள் என்றால் என்னதான் நடக்கிறது, அல்லது என்ன நினைக்கிறார் கமலஹாசன்?

பொதுவாக கமலஹாசன் , ரஜினிகாந்த் போல உணர்ச்சி வசப்பட்டு மேடையில் எதையாவது பேசி விட்டு மாட்டிக் கொள்பவரல்ல. .தெளிவாக யோசித்து, தனக்கு நெருக்கமான வட்டத்தில் ஆலோசித்துத்தான் அவர் பேசுவார். அவரது அறிக்கைகள் அத்தனை  சீக்கிரம் யாருக்கும் தெளிவாகப் புரியாத விதத்தில் இடியாப்பச் சிக்கலாகவே வரும். அதனால், இப்படி வரிசையாக பட அறிவிப்புகள் வருவதால் நமக்கு இயல்பாக ஒரு சந்தேகம் வருகிறது.

அதற்குக் காரணம் , கமல்ஹாசன் கட்சி துவங்கி களத்தில் இறங்கிய நேரத்தில் இனி கமல் சினிமாவில் நடிப்பாரா, இல்லையா என்று பொது வெளியில் நிறைய விவாதங்கள் நடந்தன. அந்த சமயத்தில்  ஒரு செய்தியாளர் இதே கேள்வியை கமல்ஹாசனிடம் கேட்டபோது அவர் சொன்ன தெளிவான பதில் என்ன தெரியுமா? மக்கள் என்னை அரசியல் தலைவராக ஏற்றுக்கொண்டால் நான் இனி சினிமாவில் நடிக்க மாட்டேன். ஒரு வேளை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை  என்றால் அது குறித்து யோசிப்போம்' என்பதாக இருந்தது. 

இப்போது, இப்படி வரிசையாக படங்கள் குறித்த அறிவிப்புகள் வருவதைப் பார்க்கும் போது, கமல் இது குறித்து ஆலோசித்து தன்னை மக்கள் அரசியல் தலைவராக ஏற்றுக்கொள்ளவில்லை என்று முடிவு செய்துவிட்டார் என்றே தெரிகிறது.

சரி,விடுங்கப்பா... அரசியலில் கொள்கை வீரர்கள், தியாகிகள், கொள்ளைக்காரர்கள், கோமாளிகள் நிறையவே இருக்கிறார்கள் என்பது எங்களுக்கு தெரியும். அவர்கள் யாரும் நடிப்பில் உங்களுக்கு குறைந்தவர்கள் இல்லை என்பதை நீங்கள் இப்போது புரிந்துகொண்டு இருப்பீர்கள். அரசியலி வெற்றிடம் ஏதும் இல்லை, சினிமாவில்தான் நீங்கள் நிரப்பவேண்டிய வெற்றிடம் இருக்கிறது. வாருங்கள் கமல்....