குமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டரை சுட்டுக்கொன்றது யார் என்பது குறித்து கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
களியக்காவிளை எஸ்.ஐ சுட்டுக் கொலை..! குல்லா அணிந்து வந்து தீர்த்து கட்டியது யார்?

மார்த்தாண்டம் வடக்கு தெருவை சேர்ந்த சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் வில்சன் மர்ம நபர்களால் நேற்று இரவு சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் களியக்காவிளை சோதனை சாவடியில் நேற்று தனியாக பாதுகாப்பு பணியில் இருந்தார். அப்போது ஸ்கார்பியோ காரில் வந்த மர்ம நபர் துப்பாக்கியால் வில்சனை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பியுள்ளார்.
சுட்டுக் கொல்லப்பட்ட வில்சன் வருகிற மே மாதம் ஓய்வு பெற இருந்தார். பணிகாலம் 4 மாதங்கள் மட்டும் உள்ள நிலையில் அவர் சுட்டுகொல்லப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கன்னியாகுமரி எஸ்பி ஸ்ரீநாத் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
நேற்று காலை தென்இந்தியாவில் பயங்கரவாதத்திற்கு திட்டமிட்ட 3 பேரை பெங்களூரில் வைத்து தமிழக கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர். முகமது கனிப்கான், முகமது சையது உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு இருந்தனர். இவர்கள் கன்னியாகுமரி பகுதியை சேர்ந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்று சந்தேகிக்கப்பட்டது.
இந்த நிலையில் பெங்களூரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடந்ததா? என்ற கோணத்தில் கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கி சூடு நடந்த இடத்தில் தமிழக மற்றும் கேரள போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே சோதனைச்சாவடி சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
அதில் இரண்டு பேர் சோதனைச் சாவடிக்கு வந்து எஸ்ஐயை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிக்கும் வீடியோ உள்ளது. அதில் ஒரு நபர் குல்லா அணிந்துள்ளார். இதனால் மதரீதியிலான பிரச்சனையை ஏற்படுத்த இந்த கொலை அரங்கேற்றப்பட்டதா என்கிற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.