மிசா சட்டத்தை வீழ்த்தி வெற்றிக் கொடி நாட்டியவர் கலைஞர்!

நெருக்கடி நிலை காலகட்டத்தில் பத்திரிகைகளுக்கு தணிக்கை முறை அமலில் இருந்ததால், கைதுசெய்யப்பட்ட தி.மு.கவினரின் பட்டியலை வெளியிட யுக்தி ஒன்றைக் கடைப்பிடித்தார் கருணாநிதி. 1976 பிப்ரவரி 3ஆம் தேதி அண்ணா நினைவு நாளன்று அண்ணா சதுக்கத்திற்கு மலர் வளையம் வைக்க வர இயலாதோர் பட்டியல் என்று ஒரு பட்டியலை வெளியிட்டார். அதில் மாவட்டவாரியாக கைதுசெய்யப்பட்டவர்களின் பெயர் இடம்பெற்றிருந்தது.


கருணாநிதி செயல்படுத்திய திட்டங்களில் அவருக்கு மிகவும் பிடித்த திட்டங்களில் ஒன்று பெரியார் நினைவு சமத்துவபுரத் திட்டம். 1998ல் மதுரை மாவட்டம் மேலக்கோட்டையில் முதல் சமத்துவபுரம் துவங்கப்பட்டது. 237 சமத்துவபுரங்கள் தமிழகத்தில் அமைக்கப்பட்டன. இதில் தலித்துகளுக்கு 40 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டன.

ராஜாஜியில் துவங்கி, டி பிரகாசம், ஓ.பி. ராமசாமி ரெட்டியார், பி.எஸ். குமாரசாமி ராஜா, காமராஜர், பக்தவத்சலம், சி.என். அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜானகி ராமச்சந்திரன், ஜெயலலிதா, ஓ. பன்னீர்செல்வம் என 11 முதல்வர்களின் ஆட்சிக்காலத்தில் அரசியல் செய்திருக்கிறார் கருணாநிதி.

தனியார் பேருந்துகளை நாட்டுடமை ஆக்கி, சேரன், சோழன், பாண்டியன், பல்லவன்,-திருவள்ளுவர் பெயர்களில் போக்குவரத்துக் கழகங்களை உருவாக்கினார். குடிசை மாற்று வாரியத்தை உருவாக்கி ஏழை மக்களும் மாடி வீடுகளில் வசிக்கும் வாய்ப்பை உருவாக்கினார். மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ் வழங்கும் திட்டத்தைக் கொண்டு வந்தார். மனிதனை வைத்து மனிதன் இழுக்கும் கை ரிக்ஷாவை ஒழித்து, இலவசமாக சைக்கிள் ரிக்ஷா வழங்கினார். தமிழறிஞர்களின் பிள்ளைகளுக்கு பொறியியல், மருத்துவப் படிப்புகளில் 5% தனி இட ஒதுக்கீடு வழங்கினார். விவசாயிகளுக்கு இலவச மின்சாரத் திட்டத்தைக் கொண்டு வந்தார். பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம் கொண்டு வந்தார். மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் ஆகியோருக்காக 20% இட ஒதுக்கீடு அளித்தார். கிழக்கு ஆசியாவிலேயே முதன்முதலாகக் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம் ஏற்படுத்தினார்.

நாடெங்கும் சமத்துவபுரங்களைத் திறந்து அவற்றிற்குப் `பெரியார் நினைவு சமத்துவபுரம்' எனப் பெயிரிட்டார். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் நலத்திற்காக தனி அமைச்சகம் ஏற்படுத்தினார்.

இடைத்தரகர்களின் தலையீடு இன்றி உற்பத்தியாளரும், நுகர்வோரும் நேரடித் தொடர்பு கொள்ளும் வகையில் உழவர் சந்தைகள் தொடங்கினார்.  கிராமப்புற ஏழை எளிய மாணவர்களுக்கு, பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளில் 5% தனி இட ஒதுக்கீடு வழங்கினார். உள்ளாட்சி அமைப்புகளில் 33 விழுக்காடு மகளிருக்கு இட ஒதுக்கீடு கொடுக்கும் சட்டத்தைக் கொண்டு வந்தார். நகரங்களை குக்கிராமங்களுடன் இணைத்திட மினிபஸ்களை அறிமுகம் செய்தார். இந்தியாவிலேயே முதன்முதலாக டைடல் பார்க் என்னும் கணினி மென்பொருள் பூங்காவை கொண்டு வந்தார்.