காமராஜரை வென்றவர் கலைஞர்! எப்படி தெரியுமா?

அமைச்சர் பதவி கொடுத்தாலும், தண்டவாளத்தில் தலை வைக்க சொன்னாலும் ஒரே மனதோடு ஏற்றுக் கொள்வான் என் தம்பி என கருணாநிதி குறித்து அண்ணா நெகிழ்ந்தது வரலாறு. அதுபோன்று தி.மு.க. தேர்தல் செலவுக்கு 10 லட்சம் ரூபாய் வசூல் செய்து தருகிறேன் என்று அண்ணாவிடம் உறுதி கொடுத்தார் கருணாநிதி.


இவ்வளவு பணம் வசூல் செய்ய முடியுமா என்று அண்ணா ஆச்சர்யப்பட, அதைவிட அதிகமாக அதாவது 11 லட்ச ரூபாய் வசூலித்துக் கொடுத்தார் கருணாநிதி. அதனைப் பாராட்டி அறிஞர் அண்ணா அணிவித்த மோதிரத்தை தன் உயிருக்கும் மேலாக பாதுகாத்து வந்தார் கருணாநிதி.  சில மாதங்களுக்கு முன்பு, கருணாநிதியின் தொண்டையில் பொருத்தப்பட்ட குழாயை எடுத்துவிட்டு மருத்துவர்கள் அவருக்கு பேச்சு பயிற்சி கொடுத்தனர். அப்போது, உங்களுக்கு யாரை மிகவும் பிடிக்கும் என்று மருத்துவர்கள் கேட்டனர். குடும்ப உறுப்பினர் பெயரைச் சொல்வார் என்று அனைவரும் காத்திருக்க, அவரோ, அறிஞர் அண்ணா என கரகரத்த குரலில் கூறினார். அதுதான் பாசத்தலைவன்.

காமராஜரை வென்றவர்..! திமுக முதன்முதலாக சட்டமன்றத் தேர்தலை சந்தித்த 1957-ம் ஆண்டு, 15 தொகுதியில் வெற்றி கண்டது. அப்போது குளித்தலை தொகுதியில் நின்று வெற்றிபெற்றவர் கருணாநிதி. இதுதான் கருணாநிதியின் முதல் வெற்றி. இந்த வெற்றியால் திமுக சட்டமன்ற கொறடாவாக இருந்தார். இதனையடுத்து 1962-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில், கடந்த தேர்தலில் வென்ற 15 திமுகவினரையும் தோல்வி அடையச் செய்யவேண்டும் என்று காமராஜர் திட்டம் தீட்டி கடுமையாக உழைத்தார்.

காமராஜரின் உழைப்பு வீண் போகவில்லை. ஆம், அவர் கட்டம்கட்டிய 15 பேரில் 14 திமுகவினர் தோற்றுப்போனார்கள். அந்தத் தேர்தலில் காமராஜரின் திட்டத்தை முறியடித்து தஞ்சாவூர் தொகுதியில் வெற்றி அடைந்தவர் கருணாநிதி மட்டும்தான். இதுவரை தோல்வியை சந்திக்காத தேர்தல் போராளி அவர்.