திருக்குவளை முதல் மெரினா வரை! நெருப்பாற்றில் நீந்தியவர் கலைஞர்!

1924 ஆண்டு திருக்குவளை என்ற குக்கிராமத்தில் பிறந்தவர் முத்துவேல் கருணாநிதி. 12 வயதில் மாணவ நேசன் கையெழுத்து பத்திரிகையை தொடங்கினார்! 14 வயதில் திராவிட அரசியலில் ஈடுபட்டார்!


17 வயதில் தமிழ்நாடு மாணவர் மன்றத்தின் தலைவர்!

18 வயதில் முரசொலி இதழை தொடங்கினார்!

20 வயதில் ஜுபிடர் சினிமா நிறுவனத்தில் வசனகர்த்தராக வேலைக்கு சேர்ந்தார்!

27 வயதில் பராசக்தி (கலைஞர் கருணாநிதியின் கதை வசனத்தில் என ஏவிஎம் நிறுவனம் போஸ்டர் அடித்து விளம்பரம் செய்யும் அளவுக்கு பெயரும் புகழும் பொருளும் சேர்த்துவிட்டார்)

32 வயதில் சட்டமன்ற உறுப்பினரானார்!

44 வயதில் முதலமைச்சரானார்

முதல் முறை 1969–1971= 2 வருடங்கள்

இரண்டாம் முறை 1971-1976 = 5 வருடங்கள்

மூன்றாம் முறை 1989–1990 =2 வருடங்கள்

நான்காம் முறை  1996 -2001 = 5 வருடங்கள்

ஐந்தாம் முறை 2006–2011 = 5 வருடங்கள் என ஏறக்குறைய 17ஆண்டுகள்  தமிழகத்தின் முதல்வராக கலைஞர் இருந்திருக்கிறார்.

சட்டசபை விவாதங்களிலும் எப்போதும் சிறப்பாக செயல்பட கூடியவர் கருணாநிதி. ஒரு முறை, "தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கருவறைக்குள் செல்ல உரிமை இல்லையே" என்று பேசிக்கொண்டிருந்த கருணாநிதியைப் பார்த்து, "கோயிலுக்கே போகாத கருணாநிதிக்கு இதுபற்றி எதற்குக் கவலை?" என்றார் இந்திய தேசிய காங்கிரஸை சேர்ந்த டி.என்.அனந்தநாயகி. "கொலை செய்தவர்கள் மட்டுமா கோர்ட்டுக்குப் போகிறார்கள். வாதாடுபவர்களும் தானே போக வேண்டும்?" என்றவர் கருணாநிதி.

1974க்கு முன்பாக முதலமைச்சர்கள் சுதந்திர தினம், குடியரசு தினங்களில் கொடியேற்ற முடியாது. ஆளுனர்தான் அதைச் செய்வார். 1974ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியிடம் இது குறித்துப் பேசிய கருணாநிதி, முதல்வர்கள் சுதந்திர தினத்தன்று கொடியேற்றும் வழக்கத்தை உருவாக்கினார். 1974 ஆகஸ்ட் 15ஆம் தேதி புனித ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றிய கருணாநிதி, சுதந்திர தினத்தன்று கொடியேற்றிய முதல் முதலமைச்சர்.