கலைஞர் 96: தமிழ் மொழியின் நவீனக் காதலர்!

கருணாநிதியின் அரசியல் எதிரியாக இருந்தாலும், அவர் நிச்சயம் கருணாநிதியின் தமிழுக்கு மட்டுமாவது ரசிகராகத்தான் இருப்பார். அந்த அளவுக்கு தமிழகத்தில் திராவிட விழிப்புணர்வுக்கு போர் ஆயுதமாகப் பயன்பட்டது கருணாநிதியின் தமிழ்தான்.


தன்னை வாழவைத்த தமிழுக்கு கருணாநிதி நிறையவே நன்றிக்கடன் செலுத்தியிருக்கிறார். மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை எழுதிய "நீராடும் கடலுடுத்த" பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக அரசு விழாக்களில் பாடும் வழக்கத்தை 1970-ல் தொடங்கிவைத்தவர் கருணாநிதி. கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய பயிற்சிகளும், சட்டமும் போட்டவர் கருணாநிதி. உலகத் தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தை உருவாக்கினார். தமிழ் மொழியை உலகமெங்கும் இருக்கும் தமிழர்கள் ஒருங்கிணைந்து பயன்படுத்தும் வகையில், தமிழ்விசைப் பலகையை தரப்படுத்துவதற்காக தமிழ் இணைய மாநாட்டை கருணாநிதி நடத்தினார். தமிழ் மொழியை செம்மொழியாக அறிவிக்கச் செய்த தமிழ் பற்றாளர் கருணாநிதி.

பெரியாரின் உண்மையான சீடர். மானமிகு சுயமரியாதைக்காரன் என்று தன்னை சொல்லிக்கொள்வதில் பெருமைப்படும் கருணாநிதி, கடைசிவரை பெரியாரின் பாதையில் நின்றவர். திருவாரூர் சுயமரியாதைச் சங்க ஆண்டு விழாவில் 28.5.1944 அன்று கலந்துகொள்ள வந்த பெரியார், கருணாநிதி நடத்திய முரசொலி ஏட்டைப் பாராட்டியதோடு நில்லாமல், ஈரோட்டிலிருந்து வெளிவந்த `குடியரசு' பத்திரிகையில் உதவி ஆசிரியராகப் பணியில் சேர்த்துக் கொண்டார்.

பெரியார் மீது கருணாநிதி கொண்டிருந்த அன்பு காரணமாக, அவர் வாழும் நாளிலேயே சிலை வைத்து அதை பெரியாரை வைத்தே திறக்க வைத்தார். பெரியாருக்கும் கருணாநிதியிடம் அன்பு உண்டு என்பதை மெய்ப்பிக்கும் விதமாகத்தான், அவர் கருணாநிதிக்கு ஒரு சிலை வடித்தார். பெரியாரின் சீடர் என்பதாலோ என்னவோ, அவரைப் போலவே 94 வயதில் மரணத்தைத் தழுவியிருக்கிறார் இந்த பகுத்தறிவாளன்.