உன் அக்காவுக்கு ஏற்பட்ட நிலைதான்! மிரட்டிய இளைஞர்கள்! மிரண்ட இளம்பெண்! அம்பலமான பகீர் கொலை!

தான் விரும்பிய பெண் காதலியாகவோ, மனைவியாகவோ தனக்கு கிடைத்தே ஆகவேண்டும். இல்லையென்றால் உயிரோடு இருக்கக்கூடாது என்ற மனரீதியாக மாறும் போக்கு தற்போது இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறது.


கடலூர் மாவட்டம் முத்தூர் அருகே இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக கருதிய நிலையில் ஒருதலை காதல் பிரச்சனையால் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற தகவல் பெற்றோருக்கு மேலும் மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் முத்தூர் அருகே ஜி.என். குப்பம் ராணி காலனியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகள் வெண்மதி +2 வரை படித்துள்ளார். இந்நிலையில் கடந்த 17ம் தேதி வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் வெண்மதியின் உடல் மீட்கப்பட்டது. வெண்மதி தற்கொலை செய்துகொண்டதாக பெற்றோர், உறவினர் கருதியதால் பிரச்சனையை பெரிதுபடுத்தாமல் காவல்துறைக்கும் சொல்லாமல் அவரை அடக்கம் செய்துவிட்டனர்.

ஆனால் பிரச்சனை அதோடு முடிந்தபாடில்லை. வெண்மதியின் தங்கை லட்சுமியை மிரட்டிய இளைஞர்கள் சிலர் உன் சகோதரிக்கு ஏற்பட்ட நிலைதான் உனக்கும் ஏற்படும் என்று எச்சரித்து அனுப்பியுள்ளனர். இதனால் பயந்து போன ஆறுமுகம் என்பவரின் மற்றொரு மகள் லட்சுமி உடனடியாக பெற்றோர் மூலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

மேலும் தனது மகள் வெண்மதி தற்கொலை செய்யவேண்டிய அவசியம் இல்லை என்றும் எனது இளைய மகளை இளைஞர்கள் மிரட்டியதன் மூலம் மூத்த மகள் வெண்மதி கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் ஆறுமுகம் காவல்நிலையத்தில் தெரிவித்தார்,.

புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் தாசில்தார் முன்னிலையில் இடுகாட்டுக்கு சென்று வெண்மதியின் உடலை தோண்டி எடுத்து அங்கேயே உடற்கூறாய்வு செய்து மீண்டும் அடக்கம் செய்தனர்.

சம்பவம் தொடர்பாக விசாரணையை துரிதப்படுத்திய போலீசார் அதே பகுதியை சேர்ந்த அதாவது வெண்மதியை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படும் பிரசாந்த் மற்றும் அவரது நண்பர்கள் இளையராஜா, விஜயகாந்த், விவேகானந்தன் உள்ளிட்டோரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.