சொரியாசிஸ் நோயுடன் உறவுக்கு அழைத்த கணவன்! அறுவெறுப்பில் மனைவி செய்த கொடூரம்!

கடலூரில் என்.எல்.சி. ஊழியரை அடித்துக்கொன்ற அவரது மனைவி எரிக்கும் முயற்சி தோல்வி அடைந்ததால் சிக்கிக்கொண்டார்.


விழுப்புரம் மாவட்டம் சின்ன சேலத்தை அடுத்த செம்பகுறிச்சி வனப்பகுதியில்  கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ஒரு கார்  எரிந்து கொண்டிருந்தது. இது குறித்த தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார், காரின் ஒரு பகுதியில் எரிந்துகொண்டிருந்த தீயை அணைத்து காரை சோதனையிட்டனர். 

அப்போது காரின் பின் இருக்கையில் சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் சடலம் ஒன்று இருப்பதை கண்ட போலீசார் , உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் என்.எல்.சி ஊழியரான பழனிவேல் என தெரியவந்தது. இதையடுத்து அவரது மனைவி மஞ்சுளாவிடம் தகவலை தெரிவிக்க போலீசார் சென்ற போது, அவர் அவசர அவசரமாக பேருந்து நிலையத்துக்கு சென்றுகொண்டிருந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து மஞ்சுளாவை மடக்கிப் பிடித்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். முதலில் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்த மஞ்சுளா, பின்னர் போலீசாரின் தீவிர விசாரணையில் பல உண்மைகளை ஒப்புக்கொண்டார். 

பழனிவேல் சோரியாசிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்ததால் மஞ்சுளா பல ஆண்டுகளாக தாம்பத்ய உறவுக்கு மறுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. மஞ்சுளாவுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில் பழனிவேல் அடிக்கடி சண்டையிட்டதாகவும் கூறப்படுகிறது.

பழனிவேல் மாத சம்பளத்துடன், வட்டித் தொழிலிலும் பணம் சம்பாதித்தும், குடும்ப செலவுக்கோ, மனைவிக்கோ பணம் தராமல் இருந்த நிலையில் அது குறித்து மஞ்சுளா தனது தம்பி ராமநாதனிடம் தெரிவித்த நிலையில் இருவரும் பழனிவேலை கொலை செய்துவிட்டு அவரது சொத்துக்களை எடுத்துக்கொள்ள திட்டம் தீட்டியதாகக் கூறப்படுகிறது.

கடந்த செவ்வாய்கிழமை இரவு வேலை முடிந்து வீடு திரும்பிய பழனிவேலை மஞ்சுளா, ராமநாதன் மற்றும் ராமநாதனின் நண்பர்கள் இருவருடன் சேர்ந்து இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்ததும் உடலை சாக்குப் பையில் கட்டி, போர்வையில் போர்த்தி காரில் எடுத்துச் சென்று வனப்பகுதியில் எரிக்க திட்டமிட்டதும் விசாரணையில் தெரியவந்தது.

மஞ்சுளாவை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள ராமநாதன் மற்றும் அவரது நண்பர்கள் இருவரை தேடிவருகின்றனர்.