மாணவருக்கு கண் போச்சு, கால் போச்சு..! காவல் துறை கண்ணியம் மீறலாமா?

பிஜேபி அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் நாட்டு மக்களின் மத்தியில் கடும் எதிர்ப்பினை விளைவித்து விட்டது. இதனை எதிர்த்து மாணவர்களும் பொங்கி எழுந்துள்ளார்கள். இதில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக குரல் கொடுத்திருக்கிறார் திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி. -


ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தரின் அனுமதியின்றிக் காவல்துறை நுழைந்து மாணவர்களைத் துவம்சம் செய்துள்ளது. மாணவர் ஒருவரின் கண் பார்வை பறி போய்விட்டது. பல மாணவர்களின் கைகள், கால்கள் முறிக்கப்பட்டன என்றெல்லாம் தகவல் வெளிவந்துள்ளது. ‘இம்‘ என்றால் சிறைவாசம் என்னும் இட்லர் பாணி தர்பார் நாட்டில் நடைபெறுகிறதா? ஆட்சியின் எந்த செயல்பாட்டையும் யாரும் எதிர்க்கவே கூடாது என்ற எழுதப்படாத சட்டம் நாட்டில் நடைமுறைக்கு வந்து விட்டதா?

வேலியே பயிரை மேய்வது போல காவல்துறையே அனுமதியின்றி ஒரு பல்கலைக்கழக வளாகத்தில் அத்துமீறி நுழையலாமா? காவல்துறை சட்டம் மீறலாம் என்று பிஜேபி ஆட்சியில் ஏதாவது சட்டத்தை நிறைவேற்றி வைத்துள்ளார்களா?

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்ப்பவர்களை நக்சலைட்டுகள் என்றும், தீய சக்திகள் என்றும் சகட்டு மேனிக்குப் பிரதமர் அர்ச்சிக்கலமா? எரியும் நெருப்பில் பிரதமர் எண்ணெய் ஊற்றலாமா?

இவ்வளவையும் செய்துவிட்டு, சொல்லிவிட்டு போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று பிரதமர் சொல்லுவது எந்த ரகத்தைச் சேர்ந்தது? போராட்டத் தீயை அணைப்பதற்குப் பதிலாக எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதுபோல வார்த்தைகளைக் கொட்டலாமா? பொறுப்பான பதவியில் உள்ளவர்கள் வார்த்தைகளை எண்ணி வெளியிட வேண்டாமா?

மாணவர்கள் மத்தியில் போராட்டம் வெடித்தால்...

ஒரு பகுதியில் மாணவர்கள் மத்தியில் போராட்டம் வெடிக்குமானால், இந்த எரியும் பிரச்சினை இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் பரவாதா? எதேச்சதிகாரம் வென்றதாக சரித்திரம் இல்லை. இப்பொழுது இந்த சட்டத்தை 5 மாநில முதல் அமைச்சர்கள் செயல்படுத்த மாட்டோம் என்று வெளிப்படையாகக் கூறிவிட்டனர். முதல் அமைச்சர்களே வீதிக்கு வந்து விட்டனர்.

அதனால் கவுரவம் பார்க்காமல் இந்த சட்டத்தை விலக்கிக் கொள்வதே ஆட்சிக்கு நல்லது என்று கேட்டுக்கொண்டுள்ளார்.