உத்தரப்பிரதேச பாலியல் கொடூரம்… அந்த கொடிய மிருங்கங்களுக்கு என்ன தண்டனை…?

உத்தரப் பிரதேசத்தில் கூட்டுப் பாலியல் வன்முறையில் பாதிக்கப்பட்ட பெண் 16 நாட்கள் சிகிச்சைக்குப் பின் மரணம் அடைந்திருக்கிறார். அந்தக் கயவர்கள் அந்தப் பெண்ணுக்கு செய்திருக்கும் கொடுமைகளைப் படிக்கும்போதே கண்கள் கலங்குகின்றன என்று எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் கவலை தெரிவித்துள்ளார்.


நான்கு பேர் இதில் சம்மந்தப்பட்டவர்கள். பாலியல் வன்முறைக்குப் பிறகும் அடித்துத் துன்புறுத்தி.. நாக்கை அறுத்து.. ச்சே! இவர்களுக்கெல்லாம் நிறுத்தி நிதானமாக விசாரணை நடத்தி தீர்ப்பு சொல்லப் போகிறது நீதி மன்றம்.? 

சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளன. பாலியல் குற்றவாளிகளுக்கு பல சமயம் தண்டனையளிக்கும் நேர்மையான தீர்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. ஆனாலும் சில சமயம் பிரபலங்களும், செல்வாக்கு மிக்கவர்களும் சம்மந்தப்பட்டக் குற்றங்களில் நீதி மன்றங்களின் மீது நம்பிக்கை குறைகிறது. 

பெண்ணின் வயிற்றிலிருந்து பிறந்து..பெண்கள் சூழ வளர்ந்து ஆனால் ஒரு பெண்ணை ஐந்து நிமிட அரிப்புக்குப் பயன்படுத்திக்கொண்டு காகிதம்போல கசக்கி வீசும் மனம் எப்படித்தான் வாய்க்கிறது இந்த அயோக்கியர்களுக்கு? இவர்களை மனித இனத்திலேயே சேர்க்க முடியாதபோது.. மனிதர்களுக்காக இயற்றப்பட்ட சட்டங்களை வைத்துக்கொண்டு ஏன் விசாரிக்க வேண்டும்?

பள்ளியிலிருந்தே பெண்ணை எப்படி மதிக்க வேண்டும் என்று ஆண்களுக்கு பாடம் நடத்த வேண்டும், பெண்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், அவர்கள் உடை விஷயத்தில் நாகரிகம் காக்க வேண்டும்.. என்று கேட்டுக் கேட்டுப் புளித்துப் போன உடனடியாக நடைமுறைத் தீர்வுக்கு உதவாத, விவாதங்களுக்குரிய அறிவுரைகளை இன்னும் எத்தனை காலத்திற்குச் சொல்லிக் கொண்டிருக்கப் போகிறோம்? 

அறிவியல் முன்னேற்றம், தொழில் வளர்ச்சி, இராணுவ பலம், பல உற்பத்திகளில் தன்னிறைவு என்று பல விஷயங்களில் உலக நாடுகளுக்கு மத்தியில் மரியாதையான இடத்தில் நிற்கும் இந்தியாவில் இப்படி தொடரும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் மனசாட்சி உள்ள ஒவ்வொரு ஆணையும் தலை குனிய வைக்கின்றன. 

நாட்டில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு காவலர் ஏற்பாடு செய்வது சாத்தியமில்லைதான். அரபு நாடுகளில் பாலியல் குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் உச்சமான தண்டனைகள் பொது மக்கள் முன்னிலையில் நிகழ்த்தப்படுவது குற்றங்களைக் கட்டுப்படுத்த மிகவும் உதவுகிறது என்பதை மறுக்க முடியாது. 

மொழி, கல்வி, விவசாயம், தொழில் என்று சகலத்திலும் மாற்றங்கள் கொண்டு வர விரும்புகிற மத்திய அரசு இந்தப் பாலியல் வன்முறைகளைத் தடுப்பதற்கும் குறைப்பதற்கும் உடனடியாக தீவிரமான சட்டத் திருத்தங்கள் கொண்டுவர வேண்டும்.

அதில் ஒன்றாக பொது மக்கள் முன்னிலையில் தண்டனை என்பதும் இருக்கலாம் என்பது என் கருத்து என்று கூறியிருக்கிறார்.