ஜூனியர் விகடன் மீது துர்கா ஸ்டாலின் வழக்கு! காரணம் தயாநிதி மாறனா அல்லது கனிமொழியா?

சமீபத்தில் வெளியான ஜூனியர் விகடன் இதழில் திராவிட முன்னேற்ற கம்பெனி என்று தலைப்புடன் ஒரு கட்டுரை வெளியிட்டு இருந்தனர்.


அந்தக் கட்டுரையின்படி, ஸ்டாலின் இப்போது கட்சி நடவடிக்கையில் தலையிடுவதே இல்லையாம். கட்சி நடவடிக்கைகளை உதயநிதி, சபரீசன் மற்றும் துர்கா ஸ்டாலின் ஆகிய மூவர் மட்டுமே மேற்கொள்கிறார்கள் என்றும், இதே நிலைமை தொடர்ந்தால் சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. ஜெயிப்பது கஷ்டம் என்று எழுதியிருந்தார்கள்.

இந்த விவகாரத்துக்காக விகடன் குழுமம் மீது துர்கா ஸ்டாலின் சார்பில் வழக்கறிஞர் ரிச்சட்ஸ் வில்சன் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என்றும், இந்த பொய் செய்திக்கு மறுப்பு வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டுள்ளது. ஏற்கெனவே மார்ட்டின் தேர்தல் நிதி கொடுத்த விவகாரத்தில் இதே போன்று வழக்கறிஞர் நோட்டீஸ் விட்டனர். இப்போது அடுத்த நோட்டீஸ் போயிருக்கிறது.

பொதுவாக துர்கா ஸ்டாலின் கட்சி விவகாரங்களில் தலையிடுவதில்லை என்பது கட்சிக்காரர்கள் அனைவருக்குமே தெரிந்த விஷயம்தான். கோயிலுக்குப் போவதும், ஜோசியர்களைப் பார்க்கவுமே அவருக்கு நேரம் சரியாக இருக்கிறது. ஆனால், துர்காவை நுழைத்து கட்டுரை எழுதியிருக்கிறார்கள் என்றால், நிச்சயம் யாரோ சொல்லித்தான் செய்திருக்கிறார்கள் என்று தி.மு.க.வினர் கருதுகின்றனர்.

குறிப்பாக இப்போது தயாநிதி மாறன், கனிமொழி ஆகிய இருவருக்கும் கட்சியில் முக்கியத்துவம் எதுவும் இல்லை. அவர்கள் இருவரும் பல்வேறு பத்திரிகை தொடர்பு உள்ளவர்கள். அதனால், இந்த இருவரில் யாரேனும் இப்படி ஒரு செய்தி போடுவதற்கு ஏற்பாடு செய்தார்களா என்றும் தி.மு.க. விசாரணை செய்து வருகிறதாம்.