வெள்ளத்தால் தத்தளிக்கும் மக்கள்! அள்ளிக்கொடுத்த நடிகை ஜெனிலியா! எவ்வளவு தெரியுமா?

மும்பை: மகாராஷ்டிராவில் வெள்ளம் பாதித்த மக்களுக்கு நடிகை ஜெனிலியா நிதி உதவி அளித்துள்ளார்.


தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ள ஜெனிலியா, முன்னாள் மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக் மகனும், நடிகருமான ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், தற்போது தென்மேற்கு பருவமழை காரணமாக, மகாராஷ்டிரா மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது.

இதில், பல இடங்களில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பொதுமக்கள் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். சுமார் 3.78 லட்சம் பேர் வெள்ள பாதிப்பில் இருந்து மீட்கப்பட்டு, தற்காலிக நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், வெள்ளம் பாதித்த மக்களுக்கு உதவும் வகையில், நடிகை ஜெனிலியாவும், அவரது கணவரும் சேர்ந்து, ரூ.25 லட்சம் நிதி உதவி அளித்துள்ளனர்.

இதனை மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிசை நேரில் சந்தித்து அவர்கள் அளித்தனர். இந்த தகவலை, முதல்வர் ஃபட்னாவிஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, நன்றி தெரிவித்துள்ளார்.