ஆந்திர சட்டசபையில் ஜெகன் மோகன் ரெட்டி ஏராளமான பொய்களை அள்ளித் தெறிக்கிறார், அதனால் அவை உரிமை மீறல் பிரச்னையை எழுப்ப இருக்கிறோம் என்று சந்திரபாபு நாயுடு ஏற்கெனவே அறிவிப்பு செய்திருந்தார்.
நாயுடுக்கு புத்தி வளரணும்! ஜெகன் மோகன் ரெட்டியின் புலிப் பாய்ச்சல்! ஆந்திரா காரம்!
அதன்படி இன்று ஆந்திர சட்டசபையில் ஏதேனும் பிரச்னை வரும் என்றே பலரும் நினைத்தார்கள். விவசாயிகள் விவகாரம் பற்றி பேசிய ஜெகன் மோகன் ரெட்டி, ‘முந்தைய தெலுங்கு தேச அரசாங்கம் விவசாயிகளை மொத்தமாக ஏமாற்றிவிட்டது. ஒரு பைசாகூட வட்டியில்லா கடன் வழங்கவில்லை’ என்று கொந்தளித்தார்.
உடனே இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தெலுங்கு தேசம் கட்சியினர், முதலமைச்சர் தகுதி மீறிப் பேசுகிறார், பொய் சொல்கிறார், தவறான தகவல்களை மன்றத்தில் சொல்கிறார் என்று மீண்டும் மீண்டும் சொன்னதும் ஜெகன் மோகன் ஆவேசமாகிவிட்டார்.
உடனே டென்ஷாக எழுந்த ஜெகன் மோகன், ‘வயதாவதால் மட்டும் ஒருவர் வளர்ந்துவிட முடியாது, புத்தியும் வளரணும்... எங்களிடம் 150 பேர் இருக்கிறோம், அத்தனை பேரும் எழுந்து நின்றால் உங்களால் தாங்க முடியாது’ என்று கடுமையாக எழுந்து பேசினார்.
அது போதாதா... உடனே ஜெகனின் ஆட்கள் அத்தனை பேரும் எழுந்து கத்த, ஒரே கூப்பாடு, வெளிநடப்புத்தான். பார்க்க பசு போன்று அமைதியாக இருந்த ஜெகன், இப்படி புலி மாதிரி பாய்ந்துவிட்டாரே என்பதுதான் ஆந்திரா டாக்.