ஜீவஜோதி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார்!

சென்னை: ஜீவஜோதி, சென்னை போலீஸ் கமிஷனரிடம் புதிய புகார் ஒன்றை அளித்துள்ளார்.


ஜீவஜோதியின் முதல் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை செய்யப்பட்ட வழக்கில், சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உறுதி செய்தது. இந்த வழக்கு காரணமாக, தமிழகம் முழுக்க பிரபலமானவர் ஜீவஜோதி. இந்நிலையில், இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு செவ்வாய்க்கிழமை நேரில் வந்து புகார் ஒன்றை அளித்தார். 

அந்த மனுவில், ''எனது 2வது கணவர் தண்டபாணியின் தாயாருக்கு  சொந்தமாக வேதாரண்யத்தில் உள்ள வீட்டை, ஒருவரிடம் அடமானம் வைத்து ரூ.10 லட்சம் வாங்கினோம். இந்நிலையில், அந்த பணத்தை தற்போது திருப்பிக் கொடுத்துவிட்டு, எங்களது ஆவணங்களை திருப்பி தரும்படி கோரினோம். அதற்கு அந்த நபர், மறுநாள் சொத்து ஆவணங்களை திருப்பி தருவதாகக் கூறியிருந்தார். 

ஆனால், மறுநாள் சென்று கேட்டபோது, எங்களை தாக்கியதோடு, தகாத வார்த்தைகளால் திட்டினார். இதுபற்றி வேதாரண்யம் போலீசில் புகார் அளித்தும் பலன் இல்லை. இதுபற்றி பின்னர் நீதிமன்றத்தில் முறையிட்டு, சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்கு பதிய நடவடிக்கை மேற்கொண்டோம். ஆனால், எங்களது எதிராளி தந்த பொய்ப்புகாரின் பேரில் எங்கள் மீதும் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். இதன்பேரில், எங்களை அடிக்கடி வேதாரண்யம் போலீசார்  அலைக்கழித்து வருகின்றனர்.

அத்துடன், நள்ளிரவில் போலீஸ் தன் வீட்டு கதவை தட்டுவதாகவும், அராஜகமாக நடந்துகொள்கின்றனர் என்றும் இதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்று குறிப்பிட்டுள்ளார். புதிய புகாருடன் ஜீவஜோதி களமிறங்கியுள்ளது, பல தரப்பிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.