ஜார்க்கண்ட்டின் 11வது முதலமைச்சர் ஹேமந்த் சோரன் ! ஆளுநர் பதவிப் பிரமானம் செய்து வைத்தார் !

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் செயல் தலைவர் ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் மாநிலத்தின் 11-வது முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.


ஹேம்நாத் சோரனுக்கு ஆளுநர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு உறுதிமொழியையும் செய்து வைத்தார். 81 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற சட்டப் பேரவை தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி 47 இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து ஜேஎம்எம் சட்டமன்றக் குழு தலைவராக ஹேமந்த் சோரன் கடந்த தேர்வு செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து ஆளுநர் திரௌபதி முர்முவைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஹேமந்த் சோரன். இந்நிலையில் ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் மாநிலத்தின் 11வது முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.

மொர்ஹாபாதி மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் ஆலாம்கர் அலாம், மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ்வர் ஓரோன் மற்றும் ஆர்ஜேடி எம்எல்ஏ சத்யானந்த் போக்தா ஆகியோரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.

இந்த விழாவில் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், இந்தியக் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி. ராஜா, ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர்.