நிலச்சரிவில் சிக்கி உயிருக்கு போராடிய நபர்! குரைத்து குரைத்தே காப்பாற்றிய நாய்! நெகிழ வைக்கும் சம்பவம்!

என்னதான் விலங்குகளுக்கு ஐந்தறிவு மனிதர்களுக்கு 6 அறிவு என தம்பட்டம் அடித்துக்கொண்டாலும் மனிதனுக்கு இல்லாத சில அபூர்வ சக்திகள் மற்ற உயிரினங்களுக்கு இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.


அந்த வகையில்தான் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிக்கொண்டு உயிருக்கு போராடிய மனிதரை மோப்பம் பிடித்து காப்பாற்றியுள்ளது காவல்துறையால் வளர்க்கப்படும் செல்லப்பிராணி எனும் மோப்ப நாய்.

ஜம்மு காஷ்மீரில் பெய்து வரும் கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்றபட்டதோடு மட்டுமல்லாமல் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு பொதுமக்கள் தங்கள் வீடுகளையும் இழந்து வருகின்றனர்.

இந்நிலையில் ராம்பன் மாவட்டத்தில் பன்தியால் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்புகளை சீர்செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது காவல்துறை பயன்படுத்தும் மோப்ப நாய் திடீரென குறைத்துக்கொண்டே நிலச்சரிவு ஏற்பட்டுள்ள மற்றொரு பகுதிக்கு ஓடியது.

என்னவென்று புரியாத போலீசார் நாய் சென்ற இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தபோது நிலச்சரிவில் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவரை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக பொதுமக்கள் உதவியுடன் அந்த நபர் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். நிலச்சரிவில் இருந்து ஒருவர் மீட்கப்படும் காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

சரியான நேரத்தில் ஒரு மனித உயிரை காப்பாற்றிய அந்த நாய்க்கு மன்னிக்கவும் செல்லப்பிராணிக்கு குவிந்து வரும் பாராட்டுக்கள் நின்றபாடில்லை.

மனிதநேயத்தை பற்றி பக்கம் பக்கமாக வாட்சப்பில் பதிவிட்டுவிட்டு கண்ணெதிரே விபத்தில் சிக்கியவனை காப்பாற்றாமல் கண்டுகொள்ளாமல் போகும் மனநிலை உள்ளவர்களுக்கு நடுவில் உள்ள செல்லப்பிராணிகளுக்கு மனிதர்களை பற்றி தெரியாது. நேயம் மட்டுமே தெரியும்.