தற்கொலை படை தாக்குதல்! ராணுவ வீரர்கள் 40 பேர் வீர மரணம்! பதிலடி உறுதி என மோடி அறிவிப்பு!

காஷ்மீரில் ராணுவ வீரர்கள் பயணித்த வாகனங்களை குறி வைத்து தீவிரவாதிகள் நிகழ்த்திய தற்கொலை படை தாக்குதலில் 40க்கும் மேற்பட்டவர்கள் வீர மரணம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


விடுமுறைக்கு சென்று இருந்த ராணுவ வீரர்கள் தற்போது பணிக்கு திரும்பும் காலமாகும். அந்த வகையில் நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து காஷ்மீர் திரும்பிய சுமார் 2500 ராணுவ வீரர்கள் பேருந்துகள் மூலமாக ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு புறப்பட்டனர்.

ராணுவத்திற்கான பிரத்யேக பேருந்துகளில் சுமார் 2500 ராணுவ வீரர்கள் ஒரே நரேத்தில் அதிகாலை 3.30 மணி அளவில் ஜம்முவில் இருந்து புறப்பட்டனர். இரவுக்குள் ஸ்ரீநகர் சென்று சேர்வது தான் பயண திட்டம்.

ராணுவ வீரர்கள் பயணிக்கும் வாகனங்களுக்கு முன்னும் பின்னும் ஆயுதம் தாங்கிய பாதுகாப்பு வாகனங்களும் சென்று கொண்டிருந்தன. கடந்த சில நாட்களாக பனிமழை பெய்திருந்த காரணத்தினால் ஜம்மு – ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடை பட்டிருந்தது.

பனிகட்டடிகளை அகற்றிவிட்டு போக்குவரத்து தொடங்கிய நிலையில் ராணுவ வீரர்களுடன் வாகனங்கள் அணிவகுத்து சென்று கொண்டிருந்தன. வாகனங்கள் புலவாமா மாவட்டத்தை அடைந்த போது தான் விபரீதம் ஏற்பட்டது. திடீரென நாலாபுறமும் இருந்து துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது.

என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்வதற்குள் ராணுவ வீரர்கள் இருந்த பேருந்து ஒன்றின் போது மர்ம வாகனம் ஒன்று வந்த வேகத்தில் மோதியது. அடுத்த நொடி பேருந்து வெடித்துச் சிதறியது. பேருந்துக்குள் இருந்த ராணுவ வீரர்கள் பலர் உடல் சிதறி உயிரிழந்தனர்.

பலர் உயிருக்கு போராடியபடி சாலையில் துடித்துக் கொண்டிருந்தனர். முதற்கட்டமாக 12 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. ஆனால் நேரம் செல்ல செல்ல பலி எண்ணிக்கு 20, 30 என  தற்போது 40ஐ தாண்டியுள்ளது.

தற்கொலை படை தீவிரவாதி தாக்கிய பேருந்தில் மட்டும் சுமார் 75 ராணுவ வீரர்கள் இருந்ததாக சொல்கிறார்கள். எனவே பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இதனிடையே தற்கொலைப்படை தாக்குதலுக்கு ஜெய்ஸ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. 2018ம் ஆண்டு அந்த தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்த அதில் அகமது என்று தெரியவந்துள்ளது. அவன் கல்கபோரா எனும் இடத்தில் இருந்து வாகனத்தை இயக்கி வந்துள்ளான்.

தாக்குதல் நடைபெற்ற இடத்தில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. என்.ஐ.ஏ அதிகாரிகளும் அங்கு விரைந்துள்ளனர். தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.   வீரர்களின் உயிர் தியாகம் வீணாகாது என்றும் மோடி கூறியுள்ளார்.