10 ஆண்டு சிறையில் இருந்து விடுதலையானவர் மர்ம மரணம்! பழி வாங்கப்பட்டாரா?

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கொலை வழக்கில் தண்டனை அனுபவித்துவிட்டு வந்தவரின் உடல் தண்டவாளத்தில் கிடந்தது பலருக்கு போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.


எம்.செட்டிஹள்ளி கிராமத்தை சேர்ந்த கட்டிடத் தொழிலாளியான மாது என்பவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். கடந்த 15 வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட தகராறில் ஒருவரை கொலை செய்த மாதுவுக்கு 10 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து 2009ல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்நிலையில் தண்டனை காலம் முடிந்து வீட்டிற்கு வந்த மாது மனைவி, மக்களுடன் வாழ்ந்து வந்தார் சில தினங்களுக்கு முன்னர் பக்கத்து ஊரில் உள்ள திருவிழாவில் கலந்து கொள்ள சென்ற மாது மாரண்டஹள்ளி பாலக்கோடு இடையிலான தண்டவாளத்தில் மர்ம முறையில் உயிரிழந்து கிடந்தார்.

இதுகுறித்து தருமபுரி ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. எனினும் தண்டவாளத்தில் கிடந்த உடலை கைப்பற்ற உரிய நேரத்தில் போலீசார் வராததால் அவ்வழியே சென்ற 2 ரயில்கள் மாதுவின் உடல்கள் மீது ஏறிச்சென்றதில் அவரது உடல் சிதிலமடைந்தது.

மாது தண்டவாளத்தை கடக்கும்போது ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாரா அல்லது முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டு அவரது உடல் தண்டவாளத்தில் வீசிவிட்டு செல்லப்பட்டதா அல்லது சிறைக்கு சென்று வந்த விரக்தியில் தற்கொலை செய்துகொண்டாரா என பல்வேறு கோணங்களில் ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மாது உடலைக் கைப்பற்றிய ரயில்வே போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தண்டவாளத்தில் கிடந்த உடல் மீது மீண்டும் மீண்டும் ரயில்கள் ஏறிச் சென்றது அப்பகுதி மக்களிடையே வேதனையை அதிகப்படுத்தி உள்ளது. ரயில் வருவதை பார்த்த பின்னரும் தண்டவாளத்தை கடந்து அடிபட்டு உயிரைப் பலர் போக்கிக் கொள்ளும் நிகழ்வு இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.