பாலியல் குற்றவாளிக்கு 21 நாளில் தூக்கு தண்டனை! சட்டம் போட்டு கெத்து காட்டும் ஜெகன்மோகன் ரெட்டி!

பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தவர்களுக்கு கொடுமையான தண்டனை கொடுக்கவேண்டும் என்பதை மனசாட்சியுள்ள அத்தனை பேருமே ஏற்றுக்கொள்ளவே செய்கிறார்கள்.


அதனால்தான் ஹைதராபாத் மருத்துவர் பிரியங்கா ரெட்டியை பலாத்காரம் செய்த நால்வரையும் என்கவுன்டர் செய்ததை, அத்தனை பேரும் பாராட்டினார்கள். அப்படியொரு பாராட்டுக்குரிய காரியத்தை செய்து கெத்து காட்டியிருக்கிறார், ஆந்திராவின் முதல் மந்திரியாக இருக்கும் ஜெகன்மோகன் ரெட்டி. பாலியல் குற்றவாளிகளிடம் கருணையே கிடையாது என்று அதிரடி சட்டம் நிறைவேற்றி இருக்கிறார்.

அதன்படி, பாலியல் குற்றச்சாட்டுகளில் ஈடுபடுவோருக்கு உடனடியாக தூக்குத் தண்டனை விதிக்க வழிவகை செய்யும், ‘திஷா 2019’ என்ற புதிய சட்ட மசோதாவை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கொண்டு வந்துள்ளார்.

இந்த சட்டத்தில் குற்றம் சாட்டப்படுபவர்கள் மீதான வழக்குகள் ஒரே வாரத்தில் விசாரிக்கப்பட்டு, அடுத்த வாரத்தில் தீர்ப்பு சொல்லப்பட்டு, மூன்றாவது வாரத்தில் அதாவது 21 நாட்களில் தூக்குத் தண்டனை விதிக்கப்படும். 

இந்த அதிரடி சட்டத்திற்கு ஆந்திர சட்ட அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்த நிலையில் இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவுக்கே புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தி வழி காட்டியிருக்கிறார் ஜெகன். இனியாவது, குற்றவாளிகள் அச்சம் அடையட்டும்.