கொரோனாவுக்கு எதிரான போர்..! எங்கள் இடங்களை பயன்படுத்திக்கோங்க..! தாராளம் காட்டும் ஈஷா சத்குரு!

கொரோனா வைரஸ்க்கு எதிரான செயல்பாடுகளுக்கு தங்களது வளாகங்களை அரசு பயன்படுத்திக் கொள்ளலாம்.


ஈஷா யோகா மையம் அறிவிப்பு:  கொரோனா வைரஸ் (கோவிட் -19) பரவுவதை கட்டுப்படுத்த அரசு எடுத்து வரும் முயற்சிகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், கோவையில் உள்ள தங்களின் கட்டிடங்கள் மற்றும் வளாகங்களை மருத்துவ பணிகளுக்கு தமிழக அரசு பயன்படுத்தி கொள்ளலாம் என ஈஷா அறக்கட்டளை அறிவித்துள்ளது.

தேவைப்பட்டால், அரசு மருத்துவமனைகளில் சேவையாற்றவும் ஈஷா தன்னார்வலர்கள் தயாராக இருப்பதாக ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார்.

தினக் கூலி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது, கொரோனா வைரஸ் பாதிப்புகளில் மிக மோசமான ஒன்றாகும். உணவின்றி அவதியுறுவது உள்நாட்டு சண்டைகளுக்கும், இறப்புகளுக்கும் வழிவகுக்கும் என்பதை ஏற்கனவே சத்குரு அவர்கள் வலியுறுத்தி வருகின்றார்கள். 

பாதிப்புக்குள்ளாகும் இந்த பிரிவினரை பாதுகாத்திட உலகெங்கிலுமுள்ள பல லட்சக்கணக்கான ஈஷா தன்னார்வலர்களும் முன்வரவேண்டும் என்றும், குறிப்பாக இந்தியாவிலுள்ள ஈஷா தன்னார்வலர்கள் ஒவ்வொருவரும், அவ்வாறு பாதிப்புக்குள்ளாகியிருக்கும் இரண்டு நபருக்கான ஊட்டச்சத்துள்ள உணவை வழங்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் ஈஷா தன்னார்வலர்களுக்கு வைத்துள்ள வேண்டுகோளில், “நீங்கள் உலகில் எங்கிருந்தாலும், உணவின்றி பட்டினியால் ஒருவர் இறந்தார் என்ற நிலைவராமல் இருப்பதை உத்திரவாதம் செய்ய வேண்டும் 

இந்த இக்கட்டான சூழலில் ஒவ்வொரு குடிமக்களும் தனிநபராக நம்மால் இயன்றதை செய்வது மட்டுமின்றி, உள்ளூர் அரசு நிர்வாகம் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் ஒத்துழைப்பு அளிப்பது நமது கடமை” என்று அவர் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உலகம் முழுவதும் நடைபெறுவதாக இருந்த ஈஷா யோகா மையத்தின் அனைத்து நிகழ்ச்சிகளும் கடந்த வாரம் முதல் தேதி குறிப்பிடப்படாமல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மும்பை, பாரிஸ், லண்டன், ஜோகன்பர்க், டர்பன், அட்லாண்டா, சான் பிரான்சிஸ்கோ, ஜூலூலாண்ட் மற்றும் நாஷ்வில்லி ஆகிய இடங்களுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் செல்வதாக இருந்த சத்குருவின் சுற்றுப்பயணங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.