ஒரே ஆண்டில் 43 லட்சம் மரக்கன்றுகள் விநியோகம்! சாதித்துக காட்டிய ஈஷாவின் மகாத்மா பசுமை இந்தியா திட்டம்!

மகாத்மா பசுமை இந்தியா திட்டப்பணிகள் தொடர்பாக ஈஷா அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது


ஈஷா பசுமை கரங்கள் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் கோவை, ஈரோடு, சேலம், மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் 35 நாற்றுப் பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. மகாத்மா காந்தியின் 150வது பிறந்த ஆண்டை முன்னிட்டு இந்த நாற்று பண்ணைகள் அனைத்தும் மகாத்மா பசுமை இந்தியா திட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டன.

இதனிடையே, காவேரி நதிக்கு புத்துயிரூட்டுவதற்காக ‘காவேரி கூக்குரல்’ என்ற இயக்கத்தை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் கடந்த ஜூலை மாதம் ஆரம்பித்தார். இந்த இயக்கம் தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் காவேரி வடிநிலப் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் 242 கோடி மரங்களை விவசாயிகள் மூலம் நடுவதற்கு களப் பணியாற்றி வருகிறது.

இந்த இயக்கம் தொடங்கப்பட்ட பிறகு மரங்கள் வளர்க்க வேண்டும் என்ற ஆர்வம் விவசாயிகள் மத்தியில் பெரியளவில் சென்று அடைந்துள்ளது. இதன் விளைவாக, மகாத்மா பசுமை இந்தியா திட்டத்தின் மூலம் நடப்பாண்டில் மட்டும் 43 லட்சம் மரக்கன்றுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. அந்த மரக்கன்றுகளை பெற்றுக்கொண்டவர்களில் 45 சதவீதம் பேர் விவசாயிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 43 லட்சம் மரக்கன்றுகளும் 100 சதவீதம் இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்டவை.

இதனால், அவை உயிர் பெற்று வளரும் வாய்ப்பு மிக மிக அதிகமாக உள்ளது. காவேரி கூக்குரல் இயக்கத்தின் விழிப்புணர்வால் தேக்கு, செம்மரம், மகோகனி, மலைவேம்பு போன்ற அதிக பண மதிப்புமிக்க மரங்களின் தேவை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இந்த தேவையை பூர்த்தி செய்யவும், 242 கோடி மரங்களை விவசாயிகள் நடுவதற்கு உறுதுணையாகவும், காவேரி வடிநிலப் பகுதிகளில் 350 புதிய நாற்றுப் பண்ணைகள் உருவாக்கப்பட உள்ளன.

மகாத்மா பசுமை இந்தியா திட்டத்தில் மரக் கன்றுகள் விநியோகம் செய்வதோடு மட்டுமின்றி, விவசாயிகளுக்கு இலவசமாக ஆலோசனையும் வழங்கப்படுகிறது. வேளாண் காட்டை உருவாக்க விரும்பும் விவசாயிகளின் நிலங்களுக்கு இக்குழுவினர் நேரில் சென்று மண், நீர், சூழலியலை ஆய்வு செய்து மண்ணுக்கேற்ற மரங்களை பரிந்துரை செய்கின்றனர். 

காவேரி வடிநிலப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் வேளாண் காடு முறைக்கு மாறுவதன் மூலம் அவர்களின் வருமானம் 300 முதல் 800 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும், 9 முதல் 12 டிரில்லியன் தண்ணீரும் கூடுதலாக கிடைக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பபட்டுள்ளது.