ஆன்லைன் சூதாட்டங்களுக்குத் தடை:… ராமதாஸுக்கு கிடைத்த வெற்றியா..?

ஆன்லைன் சூதாட்டத்தை தடை போடவேண்டும் என்று ஆளும் கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தி.மு.க. வரையிலும் கோரிக்கை வைத்துள்ளன. இதற்கு ஆளுநர் ஒப்புதல் கொடுத்த வகையில், ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட்டுள்ளது. இப்போது, இது பா.ம.க.வுக்கு கிடைத்த வெற்றி என்று கொண்டாடுகிறார் ராமதாஸ். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.


தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் ஆன்லைன் சூதாட்டங்களில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டதாக பத்துக்கும் கூடுதலான வழக்குகள் பதிவாகியுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை கடந்த சில மாதங்களில் பதிவானவை ஆகும். இவை தவிர வெளியில் தெரியாமல் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டங்களில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டிருக்கக்கூடும்.

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டவர்கள் அனைவரும் 40 வயதுக்கும் குறைவானவர்கள்; பலர் 20 வயதுகளின் தொடக்கத்தில் இருந்தவர்கள்; பெரும்பான்மையினர் திருமணம் ஆகாதவர்கள்.

குடும்பச் சுமையை தங்களின் தோள்களில் ஏற்றி, தூக்கிச் சுமக்க தயாராகும் வயதில் இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டால், அந்த குடும்பங்கள் எந்த அளவுக்கு நிலைகுலைந்து போகும் என்பதை மக்களுடன் மக்களாக வாழ்ந்து வரும் நான் அறிவேன். அதனால் தான் ஆன்லைன் சூதாட்டங்கள் குறித்து தமிழ்நாட்டில் எந்த அரசியல் கட்சியும் பேசாத நிலையில், கடந்த 2016&ஆம் ஆண்டிலிருந்தே ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

அதன் பயனாக ஏற்பட்ட விழிப்புணர்வுகள் காரணமாகவே உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, நீதிபதிகளும் கூட ஆன்லைன் சூதாட்டங்களுக்கு எதிராக கருத்துகளைத் தெரிவித்தனர். இவற்றின் விளைவாகவே ஆன்லைன் சூதாட்டத்தை தமிழக அரசு தடை செய்திருக்கிறது. அந்த வகையில் இது பா.ம.கவுக்கு கிடைத்த வெற்றி; தமிழகத்தின் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சி பா.ம.க. என்பதற்கு சான்று.

ஆன்லைன் சூதாட்டங்கள் தடை செய்யப்பட்டிருப்பதன் மூலம் லட்சக்கணக்கான குடும்பங்கள் பணத்தை இழந்து நடுத்தெருவுக்கு வருவது தடுக்கப்படும்; இளைஞர்கள் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்வது இனி நடக்காது. அந்த வகையில் தமிழக அரசின் நடவடிக்கை உண்மையாகவே பாராட்டத் தக்கது.

ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதித்துள்ள தமிழக அரசு, அது சொல்லிலும், செயலிலும் செம்மையாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். அதற்காக சைபர்- கிரைம் பிரிவு, குற்றப்பிரிவு ஆகியவற்றின் காவலர்களைக் கொண்ட தனிப்பிரிவு ஒன்றை அரசு உருவாக்க வேண்டும்.

ஆன்லைட் சூதாட்டங்களுக்கு மாணவர்களும், இளைஞர்களும் அடிமையாவதற்கு காரணம் அவற்றின் விளம்பரங்கள் தான். அதுமட்டுமின்றி, ஆன்லைன் சூதாட்டம் ஆட ரூ.2,000 முதல் ரூ.10.000 வரை போனஸ் வழங்குவதாக ஒவ்வொருவரின் செல்பேசிக்கும் ஒரு மணி நேரத்தில் 5 முதல் 10 குறுஞ்செய்திகள் வருகின்றன.

அவற்றில் மயங்கி தான் இளைஞர்கள் சூதாட்டத்திற்கு அடிமையாகின்றனர். இத்தகைய விளம்பரங்கள் மற்றும் குறுஞ்செய்திகளை தமிழக அரசு பிறப்பித்துள்ள அவசர சட்டத்தால் தடுக்க முடியாது. எனவே, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து ஆன்லைன் சூதாட்டங்களுக்கு இளைஞர்களை கவர்ந்து இழுக்கும் விளம்பரங்களுக்கு தடை விதிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.