அசாம் மாநிலத்தில் இருந்து முஸ்லீம்களை வெளியேற்றும் முயற்சியா? தேசிய குடிமக்கள் பட்டியலில் சிக்கல்கள்!

கடந்த ஆகஸ்டு மாதம் அசாம் மாநிலத்தில் இறுதி தேசிய குடிமக்கள் பட்டியல் வெளியானது. இதில் 19 லட்சம் மக்கள் விடுபட்டிருந்தனர். இந்த இறுதிப் பட்டியலில் இடம்பெற்றுவிட்டால் போதும் என நிம்மதியடைந்த மக்களின் மீது மேலும் ஒரு இடியாக இறக்கியுள்ளது அரசு.


ஆம், ஒருவர் குடியுரிமை பெற்றிருந்தாலும்கூட எந்த நேரத்தில் அவருடைய குடியுரிமை பறிக்கப்பட்டு துரத்தப்படுவார். ‘சட்டவிரோத குடியேறிகளைக்’ கண்டறிய பணியமர்த்தப்பட்டுள்ள அசாமில் உள்ள எல்லை போலீசு எவரையாவது வெளிநாட்டவர் என சந்தேகித்தால் அவரை வெளிநாட்டவர் தீர்ப்பாயத்தில் ஆஜராகச் சொல்லி, தன்னை இந்திய குடிமகன்தான் என நிரூபிக்கச் சொல்லும்.

ஏற்கெனவே, வெளிநாட்டவர் தீர்ப்பாயங்கள் பதிவேட்டிலிருந்து விலக்கப்பட்டவர்களின் உரிமை கோரல்களை அடுத்த 120 நாட்களுக்குள் மறு ஆய்வு செய்யும் பணியைச் செய்துகொண்டுள்ளன. இதில் என்.ஆர்.சி. அதிகாரிகளின் முடிவுக்கு விட்டுவிடுவதா அல்லது அவர்களை வெளிநாட்டவர் என அறிவிப்பதா அல்லது அவர்களை இந்தியர்கள்தான் என அறிவிப்பதா என்பதை தீர்ப்பாயங்கள் முடிவு செய்யும்.

தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதிப் பட்டியலோடு வெளியிடப்பட்டுள்ள குறிப்புகள், இன்னும் நிறைய ‘பணிகளை’ தீர்ப்பாயங்கள் செய்யும் என தெரிவிக்கின்றன. என்.ஆர்.சி. பட்டியலில் இடம்பெற்றிருக்கும் போதிலும், தீர்ப்பாயம் நினைத்தால் அவர்களை வெளியேற்றலாம்.

பாஜக-வின் முக்கியப் புள்ளியும் அசாம் மாநில அமைச்சருமான ஹிமந்தா பிஸ்வ சர்மா, “என்.ஆர்.சி என்பது இருந்தாலும், எங்களுடைய எல்லைப் போலீசு சந்தேகத்துக்குரியவர்களை கேள்வி கேட்கும், விசாரிக்கும், கைதும் செய்யும். இது தொடரும்” என தெரிவித்துள்ளார்.

கவுஹாத்தியைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் நிலாய் தத்தா, “என்.ஆர்.சியில் இடம்பெற்றிருந்த ஒரு நபரை வெளிநாட்டவர் தீர்ப்பாயம் விசாரிக்குமா என்று கேட்டால், நிச்சயம் விசாரிக்கும். அரசாங்கம் செய்வதை தடுக்க சட்டத்தால் முடியாது. இதில் யாருக்கேனும் பிரச்சினை இருந்தால் அதற்குரிய சட்டப்பிரிவின்படி நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம்” என்கிறார்.

முசுலீம்களை மட்டுமே குறிவைத்து, இத்தகைய சட்டப் பிரிவுகள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், இதை எதிர்த்து ஒரு சிறுபான்மையினர் அமைப்பு வழக்கு தொடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. “வெளிநாட்டவர் தீர்ப்பாயம்தான் அனைத்தையும் முடிவு செய்யும் எனில், என்.ஆர்.சி.க்கான மதிப்பு என்ன? அப்படியெனில் என்.ஆர்.சி. என்பது பயனற்ற ஆவணம்” என்கிறார் அந்த அமைப்பைச் சேர்ந்த ஒருவர்.

“ஒரு நபர் பல அடுக்கு சரிபார்த்தலுக்குப் பிறகே என்.ஆர்.சி. பட்டியலில் சேர்க்கப்படுகிறார். இதை முற்றிலுமாக மறுக்கும் வகையில் மீண்டும் ஒருவரை தன்னுடைய குடியுரிமையை நிரூபிக்கச் சொல்கிறது இந்தப் பிரிவு. பல பேருக்கு இப்படியொன்று இருப்பதே தெரியாது” என்கிறார் அவர்.

சுருக்கமாக சொல்வதென்றால், முசுலீம்களை அசாமிலிருந்து வெளியேற்றுவதற்கென்றே புதிதுபுதிதான வழிகளை, சட்டப்பிரிவுகளை ஏற்படுத்தி வருகிறது அரசு என்று வினவு பத்திரிகை தெரிவித்துள்ளது.