ரஜினி, கமல் ரசிகர்கள் தேர்தலில் வாக்களிக்கலாமா கூடாதா? பதில் சொல்லுங்க எஜமானரே!

ஒரு நாட்டின் ஆன்மா கிராமங்களில்தான் இருக்கிறது என்றார் மகாத்மா காந்தி.


கிராம சபைக்கு உரிய அதிகாரம் கொடுத்து பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை நிறைவேற்றியது காங்கிரஸ். ஆனால், அந்த உள்ளாட்சித் தேர்தலை கேவலமாக நினைத்து ஒதுங்கி நிற்கிறார்கள், நாளைய முதல்வர் வேட்பாளர்களான கமல்ஹாசனும், ரஜினிகாந்தும்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்னும் கட்சியைத் தொடங்கவில்லை, அதனால் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று சொன்னது சரிதான் என்று சொல்வது முட்டாள்தனம். ஏனென்றால் அதிகாரம் என்பது மேல் மட்டத்தில் மட்டும் இருப்பது அல்ல. கீழ் மட்டத்தில் இருப்பதுதான் உண்மையான அதிகாரம். தூய்மைப்படுத்தும் முயற்சியை கீழ் மட்டத்தில் இருந்துதான் தொடங்கவே வேண்டும். அதனால், உள்ளாட்சித் தேர்தலை புறக்கணித்து நேரடியாக சட்டமன்றத் தேர்தலில் நுழைய நினைப்பது ரஜினியின் அறியாமை.

கமல்ஹாசன் நிலவரம் அதைவிட மோசம். ஏனென்றால் அவர்தான் முதன்முதலில் கிராமப்பஞ்சாயத்து என்று கிராமங்களுக்குப் போய்வந்தார். அந்த அதிகாரம் பற்றி நன்றாகத் தெரிந்திருக்கும் கமல்ஹாசனும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்து இருக்கிறார்.

ஏனென்றால், அவர் இப்போது சினிமா சூட்டிங்கில் செம பிஸியாக இருக்கிறார். இந்த நேரத்தில் பட சூட்டிங்கை பாதியில் நிறுத்திவிட்டு வர இயலாது என்று காரணம் சொல்லி தள்ளிப் போட்டிருக்கிறார்.

ஆக, இரண்டு பேரும் கிராமத்து மக்களை மதிக்கும் எண்ணத்தில் இல்லை என்பது உறுதியாகிறது. அதெல்லாம் சரி, உள்ளாட்சித் தேர்தலில் தங்கள் ரசிகர்கள் ஓட்டு போடலாமா என்பதையும் சொல்லிவிடுவது நல்லது.