புகழேந்தியை வெளியேற்ற முடியாமல் தினகரனை தடுப்பது சசிகலாவா?

யார் வெளியே போனாலும் போகட்டும், போறவங்களை தடுத்து நிறுத்தவா முடியும். எங்கே போனாலும் நல்லா இருக்கட்டும் என்று வியாக்கியானம் பேசுபவர் தினகரன். அதாவது, அவரை விட்டு யார் போனாலும் அவர் கவலையே பட மாட்டாராம்.


அப்படித்தான் செந்தில் பாலாஜி தொடங்கி தங்கதமிழ்செல்வன், கலைச்செல்வன், பரணி என எல்லோரையும் விரட்டிவிட்டார். இந்த நிலையில்தான் பெங்களூரு புகழேந்தி வீடியோ ஒன்று வெளியானது. அந்த வீடியோவை வெளியிட்டது அ.ம.மு.க.வின் ஐ.டி. டீம் என்று நேரடியாகவே குற்றம் சுமத்தினார் புகழேந்தி.

திருச்சிக்கு வந்த தினகரனிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பியபோது, ‘‘தேவையில்லாத விஷயங்களைப் பேசி நம்முடைய நேரத்தை வீணடிக்க வேண்டாம். என்ன நடக்கிறது என்பதை நீங்களும் ஒளிபரப்பி வருகிறீர்கள். நானும் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருக்கிறேன். எல்லாவற்றையும் விசாரித்து யார் மீது தவறு இருந்தாலும் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பேன். 

என்னுடன் இருந்த எல்லோரும் கட்சியை விட்டுச் செல்லவில்லை. ஒருசிலர் தங்களது சுயநலம் மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காகவே சென்றுள்ளனர். அதனை நான் துரோகம் என்று கூற விரும்பவில்லை. ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவுகள் தீர விசாரித்து எடுக்கப்பட்டவை. தற்போதும் தீர விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று கூறினார்.

அதாவது, சட்டென்று புகழேந்தியை கட்டம் கட்டுவதற்கு தினகரன் முயற்சி செய்யவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது. ஏனென்றால், சசிகலாவை அடிக்கடி சந்தித்துப் பேசும் புகழேந்தியை தூக்கினால், வேறு வகையில் பிரச்னை வரும் என்று எதிர்பார்க்கிறார். அதனால் சமாதானம் பேசப்படுகிறதாம்.

தினகரனுடன் சமாதானம் பேசிவரும் புகழேந்தி, அதே சமயம் பா.ஜ.க.வை நெருங்கி வருகிறார் என்றும் தகவல் சொல்கிறார்கள்.