மோடியின் அமைச்சரவை ஒப்புதல் கொடுத்த புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், ’இது வரவேற்க வேண்டிய நகர்வு’ என்று காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு கருத்து தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து குஷ்பு அவுட்..? என்ன ஆதாயத்துக்காக புதிய கல்விக் கொள்கையை ஆதரிக்கிறார்..? கே.எஸ்.அழகிரி சுளீர்.

இந்த கருத்து காங்கிரஸ் மட்டுமின்றி கூட்டணிக் கட்சிகளிலும் பெரும் அதிர்வை உருவாக்கியது. ஏற்கனவே குஷ்பு பா.ஜ.க.வில் சேர்வதற்கு காய் நகர்த்துவதாக பலமாக பேசப்பட்டது. அதுகுறித்து கேட்டபோது, அப்படி இல்லை, நான் கட்சி மாறப்போவதில்லை என்று தெரிவித்தார் குஷ்பு. ஆனால் இப்போது, ‘கல்விக் கொள்கையில் எனது நிலைப்பாடு காங்கிரஸிலிருந்து வேறுபடுவதற்காக ராகுல் காந்தியிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
நான் தலையை ஆட்டும் ரோபோ அல்லது கைப்பாவையாக இருப்பதை விட உண்மையை பேசுகிறேன் என்றும் கூறினார். புதிய கல்விக்கொள்கையில் சில இடங்களில் குறைகள் இருப்பினும், மாற்றத்தை நேர்மறையுடன் பார்க்கிறேன்’ என்று குறிப்பிட்டார்.
இது பெரும் சர்ச்சையை உருவாக்கிய நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, “காங்கிரஸ் உலகின் மிகப்பெரிய ஜனநாயக அரசியல் கட்சி. கட்சிக்குள் எந்தவொரு சர்ச்சைக்குரிய விஷயத்தையும் நாங்கள் பேச முடியும். கட்சியின் அமைப்புக்குள் பேசினால் அதற்கு வரவேற்பு உண்டு.
பொது வெளியில் பேசினால் அது அரசியல் முதிர்ச்சியற்றது, ஒழுக்கமற்றது என அழைக்கப்படுகிறது. அது விரக்தியிலிருந்து வருகிறது. அதனை குணப்படுத்த யோகா சிறந்த மருந்து” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில் குஷ்பு ஏதோ ஆதாயம் தேடியே பா.ஜ.க.வுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கருத்துகள் வெளியாகி வருகின்றன. அதனால், எந்த நேரத்திலும் காங்கிரஸ் கட்சியில் இருந்து குஷ்பு கட்டம் கட்டப்பட்டு பா.ஜ.க.வில் இணைந்து மோடியின் கரத்தை வலுப்படுத்துவார் என்றே எதிர்பார்க்கலாம்.